Skip to main content

“ஏழை எளிய நடுத்தர மக்கள் கடன் பெறவே முடியாது..” - ஆர்.பி.ஐ.க்கு சிபிஎம் கடும் கண்டனம்!

Published on 23/05/2025 | Edited on 23/05/2025

 

CPM strongly condemns RBI over jewelry loans

ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய நிபந்தனைகளை உடனடியாக கைவிட வேண்டுமெனவும், மத்திய நிதித்துறை அமைச்சகம் நகைக் கடன் வழங்கும் விதிமுறைகளை எளிமையாக்க ரிசர்வ் வங்கிக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக் கடன் வழங்குவதற்கான புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் அடகு வைக்கப்படும் தங்க நகையின் மொத்த மதிப்பில் 75 சதவீதத்துக்கு மட்டுமே கடன் வழங்கப்படும், நகை தங்களுடையதுதான் என்பதற்கான ஆதாரம் வழங்க வேண்டும், முழு கடனையும் அடைத்து திருப்பினால் மட்டுமே நகை மறு அடமானம் வைக்க முடியும் உள்ளிட்ட புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. இனி பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்களில் ஏழை, எளிய நடுத்தர மக்கள் நகைக் கடன் பெறவே முடியாது என்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த மோசமான நடவடிக்கையினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

ரிசர்வ் வங்கியின் புதிய நிபந்தனைகளில், ஏற்கனவே தங்க நகையின் மொத்த மதிப்பில் 80 சதவீதம் கடன் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது ஏழை, எளிய மக்களை வஞ்சிப்பதாகும். கடன் கோருபவர்களின் சொந்த நகையா என்பதை தெரிந்து கொள்ள நகை வாங்கிய ரசீது வழங்க வேண்டுமென கூறுவதும் பெரும்பாலான நகைகள் இரண்டு, மூன்று தலைமுறைகளை கடந்து பயன்பாட்டில் உள்ள நிலையில் அத்தகைய நகைகளுக்கு ரசீதுகளை தாக்கல் செய்ய வேண்டுமென்பதும் எவ்விதத்திலும் நியாயமற்ற செயலாகும். மேலும், அடமானம் வைத்த நகையை முழுமையாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய நிபந்தனை நகையை மறு அடமானம் வைப்போர் கந்துவட்டிக்காரர்களிடம் தஞ்சம் புகுவதற்கான ஏற்பாட்டை செய்து கொடுக்கிறது. இது கிராமப்புற மக்களையும், ஏழை, எளிய மக்களையும், விவசாயிகள், சிறு-குறு தொழில்முனைவோர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் கொடுமைப்படுத்தும் செயலாகும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை கடன் வாங்குவதற்கு மொத்த கடனில் 10 சதவீதத்தையே அடமானமாக வங்கிகள் கேட்பது, பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை பெருமுதலாளிகள் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தவில்லையென்றால் அவற்றை தள்ளுபடி செய்வது, கடன் வாங்கி விட்டு அவற்றை திரும்ப செலுத்தாத பெருமுதலாளிகளின் பெயர்களை வெளியிட மறுப்பது என்று பல்வேறு வகைகளில் பெருமுதலாளிகளுக்குச் சாதகமாக பொதுச் சொத்துகளை வாரிக்கொடுக்கும் வங்கிகள்தான் ஏழை, எளிய கிராமப்புற மக்கள் வாங்கும் சிறு அளவிலான நகைக் கடன்களை கட்டுப்படுத்துவதற்கும், நிராகரிப்பதற்குமான செயல்களில் இறங்கியுள்ளன. இது முற்றிலும் நியாயமற்ற அணுகுமுறையாகும். எனவே, ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய நிபந்தனைகளை உடனடியாக கைவிட வேண்டுமெனவும், மத்திய நிதித்துறை அமைச்சகம் நகைக் கடன் வழங்கும் விதிமுறைகளை எளிமையாக்க ரிசர்வ் வங்கிக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்