Advertisment

கோவிஷீல்ட் செலுத்திக்கொண்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் அனுமதி மறுப்பா? - ஐரோப்பிய தூதர் விளக்கம்!

EU ENVOY

ஐரோப்பிய ஒன்றியம், தங்களது கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு வருவதற்கும், ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டிலிருந்து இன்னொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டிற்குச் செல்வதற்கும் வசதியாக ஜூலை 1 முதல் 'கிரீன் பாஸ்' என்ற அனுமதிச் சீட்டு நடைமுறையைச் செயல்படுத்தவுள்ளது. இதனைப் பெறுவதற்கான நடைமுறையில்,ஐரோப்பிய மருந்துகள் முகமையின் ஒப்புதல் பெற்ற தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே கிரீன் பாஸ் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisment

ஐரோப்பிய மருந்துகள் முகமை இதுவரை வேக்ஸேவ்ரியா, அமெரிக்காவின் ஃபைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. இதனால் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்வதில் சிக்கல் ஏற்படும் என தகவல் வெளியானது. சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் விரைவில் தீர்க்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisment

இந்தநிலையில் கோவிஷீல்ட் செலுத்திக்கொண்டர்வர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்களா என்பது குறித்து இந்தியாவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் உகோ அஸ்டுடோ விளக்கமளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர், "கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு எந்தத் தடையும் இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பயணத்தை எளிதாக்கும் வகையில் டிஜிட்டல் கோவிட் சான்றிதழ் மூலமான புதிய அமைப்பை நாங்கள் அமைத்துள்ளோம். அடிப்படையில், இந்தச் சான்றிதழ் ஒரு நபர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர் அல்லது கரோனா பரிசோதனையில் நெகடிவ் முடிவினைப் பெற்றவர் அல்லது கரோனாவிலிருந்து மீண்டவர் என்பதற்கான சான்று. இது பயணத்திற்கான முன் நிபந்தனை அல்ல" என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர், உதாரணமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களும் கரோனா பரிசோதனை, தனிமைப்படுத்தல் போன்ற கரோனா சுகாதாரக் கொள்கை தொடர்பான நடவடிக்கைகளுக்கு உட்பட்டு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்" என கூறியுள்ளார். இதன்மூலம் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் வழக்கமான கரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பயணம் செய்ய வேண்டும் என தெரிகிறது.

அஸ்ட்ராஜெனெகாவின் பதிப்பான வாக்ஸெவ்ரியா தடுப்பூசி ஐரோப்பிய ஒன்றியத்தால் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதனுடைய மற்றொரு பதிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படாதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த உகோ அஸ்டுடோ, "தயாரிப்பு முறை எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும், தடுப்பூசிகள் உயிரியல் தயாரிப்புகள் என்பதால், உற்பத்தி சூழலில் ஒரு சிறிய வித்தியாசம் கூட வேறுபாடுகளை ஏற்படுத்தும். எனவே ஒவ்வொரு தயாரிப்பும் ஆய்வுக்குட்படுவது அவசியம்" என கூறியுள்ளார்.

மேலும் அவர், "நான் படித்தவற்றின் அடிப்படையில், ஐரோப்பிய மருந்துகள் முகமை, இதுவரை தாங்கள் கோவிஷீல்ட்க்கு அனுமதி கோரும் எந்த விண்ணப்பத்தையும் பெறவில்லை என்கிறார்கள். அதற்கான விண்ணப்பத்தை பெற்ற பிறகு, அவர்கள் தங்களது நடைமுறைகளின்படி விண்ணப்பத்தை பரிசீலிப்பார்கள் என நம்புகிறேன்" என கூறியுள்ளார்.

covishield EUROPEAN UNION
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe