Court orders BJP leader Apologize to IAS officer for pakistani remark in karnataka

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ஆபரேஷன் சிந்தூரை தலைமையேற்று நடத்திய கர்னல் சோபியா குரேஷியை, பயங்கரவாதிகளின் சகோதரி என்று மத்தியப் பிரதேச பா.ஜ.க அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் கண்டனத்தைத் தவிர, பாஜக அமைச்சரின் கருத்துக்காக மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அவரைக் கண்டித்தது. அதனை தொடர்ந்து, ஐ.ஏ.எஸ் அதிகாரியும், காவல்துறை பெண் துணை ஆணையருமான ஃபெளசியா தரணத்தை கர்நாடகா பா.ஜ.க எம்.எல்.சி ரவிக்குமார் ‘பாகிஸ்தானி’ என்று பேசியது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கர்நாடகா மாநில எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்து சாலவாடி நாரயணசாமி, கடந்த மே 21ஆம் தேதி கலபுராகியின் சித்தாபூரில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு திரங்கா யாத்திரைக்காக வருகை தந்தார். அப்போது அவர், மாளிகையை விட்டு வெளியேறுவதை காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகையிட்டு தடுத்தனர். அப்போது அவர் விருந்தினர் மாளிகையின் உள்ளே அடைக்கப்பட்டார்.

Advertisment

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 24ஆம் தேதி கலபுரகியில் பா.ஜ.க சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் பேசிய பா.ஜ.க எம்.எல்.சி ரவிக்குமார், “கடந்த வாரம் கலபுரகியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையை காங்கிரஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். பாஜக எம்.எல்.சி.யும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சலவாடி நாராயணசாமியை வெளியே வர அனுமதிக்கவில்லை. ​​கலபுரகியில் உள்ள துணை ஆணையர் அலுவலகம் அதன் சுதந்திரத்தை இழந்துவிட்டது. காங்கிரஸ் சொல்வதை மட்டுமே அதிகாரி கேட்கிறார். கலபுரகி துணை ஆணையர் பாகிஸ்தானில் இருந்து வந்தாரா? அல்லது இங்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியா? என்று எனக்கு தெரியவில்லை. உங்கள் கைத்தட்டலைக் கேட்டப் பிறகு, அவர் பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரியும், கலபுரகியில் காவல்துறை துணை ஆணையராகவும் பொறுப்பு வகித்து வரும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஃபெளசியா தரணத்தை, பாகிஸ்தானில் இருந்து வந்தவர் என்று பா.ஜ.க எம்.எல்.சி பேசியிருந்தது சர்ச்சையாக மாறியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம், ரவிக்குமாரின் கருத்துகளைக் கண்டித்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியது. இதனை தொடர்ந்து, பாஜக எம்.எல்.சி ரவிக்குமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ஃபெளசியா தரணம், “இந்த விஷயத்தில் நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இது ஒரு தனிப்பட்ட முடிவு, அதை மதிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். என் வேலையே செய்ய விடுங்கள். நான் எனது வேலைகளைச் செய்வதில் கவனம் செலுத்த விரும்புகிறேன்” என்று கூறினார்.

இந்த நிலையில், கலபுரகி துணை ஆணையர் ஃபெளசியா தரணத்தை ‘பாகிஸ்தானி’ என்று குறிப்பிட்ட பா.ஜ.க எம்.எல்.சி ரவிகுமார், ஃபெளசியா தரணத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடகா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடகா உயர் நீதிமன்றத்திடம் ரவிக்குமார் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுராஜ் கோவிந்தராஜ் முன்பு வந்தது. அப்போது நீதிபதி சுராஜ் கூறியதாவது, ‘இது போன்ற கருத்துக்கள் வெளியிடக்கூடாது. மத்தியப் பிரதேசத்திலுன், உச்ச நீதிமன்றத்திலும் ஒரு அமைச்சருக்கு என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்களும் வேறுபட்டவர் அல்ல. நீங்கள் இது போன்ற கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது. அதனால், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஃபெளசியா தரணத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்று கூறினார்.