
டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் கடந்தாண்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிக் கொண்டிருந்தனர். அதன் ஒரு பகுதியாக, ஒரு பாரில் சிறிய உடைகளை அணிந்து ஆபாசப் பாடல்களுக்கு நடனம் ஆடியதாக ஏழு பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு கடந்த 4ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் தெரிவித்ததாவது, ‘பொது இடங்களில் சிறிய ஆடைகளை அணிவது குற்றமல்ல.நடனம் பொதுமக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தினால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், இந்த செயலால் எரிச்சலடைந்த எந்த சாட்சிகளையும் காவல்துறை வழங்கத் தவறிவிட்டது. அரசு தரப்பு சாட்சிகள் இருவரும் மகிழ்ச்சிக்காக மதுக்கடைக்குச் சென்றுள்ளனர். அவர்களுக்கு வழக்கைப் பற்றி எதுவும் தெரியாது.
அதே போல், குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் ரோந்து பணியில் இருந்ததற்கான எந்த ஆவணத்தையும் காவல்துறையினர் வழங்கத் தவறிவிட்டது. போலீசார் அறிக்கையை ஆதரிக்கும் பணிப் பட்டியல் இல்லாததால், போலீசாரின் வாய்மொழி அறிக்கைக்கு மட்டும் எந்த முக்கியத்துவத்தையும் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அரசு தரப்பு கூறுவதில் சந்தேகம் இருக்கிறது. நம்பகமான சாட்சிகளை வழங்க அரசு தரப்பு தவறிவிட்டது. இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்காக தெரிகிறது’ என்று கூறி அந்த 7 பெண்களையும் வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தது.