
வனத்துறை அதிகாரியை அடித்ததற்காக பா.ஜ.க மூத்த தலைவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், பா.ஜ.க மூத்த தலைவரான பவானி சிங் ரஜாவத் முன்னாள் எம்.எல்.ஏவாக பொறுப்பு வகித்து வந்தார். இவர் மீது கடந்த மார்ச் 2022ஆம் ஆண்டு, வனத்துறை அதிகாரியான ரவிக்குமார் மீனா என்பவர் நயாபுரா காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், ‘கோயில் அருகே நடந்த சாலை பணிகளை நிறுத்தியதற்காக, முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ பவானி சிங் மற்றும் அவரது பா.ஜ.க உறுப்பினர்கள் தன்னுடைய அலுவலகத்துக்கு அத்துமீறி நுழைந்து, வாக்குவாதம் செய்தனர். அதில் ஏற்பட்ட தகராறால் தன் கண்ணத்தில் பவானி சிங் அடித்தார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
அந்த புகாரின் பேரில், பா.ஜ.க தலைவர் பவானி சிங் மற்றும் அவரது உதவியாளர் மகாவீர் சுமன் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த ஏப்ரல் 1 2022ஆம் ஆண்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. 10 நாட்கள் சிறையில் இருந்த பவானி சிங், ஜாமீன் பெற்று விடுதலையானார்.
இந்த நிலையில், கோட்டா சிறப்பு நீதிமன்றத்தில் இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், பா.ஜ.க மூத்த தலைவர் பவானி சிங் மற்றும் அவரது உதவியாளர் மகாவீர் சுமர் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.30,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு வெளியான பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பவானி சிங், “நான் வனத்துறை அதிகாரி ரவிக்குமார் மீனாவை அறையவில்லை. அவரது தோள்களில் மட்டுமே கை வைத்தேன். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்” என்று கூறினார்.