/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/arvind-kejriwaal-ni_5.jpg)
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத்தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி சட்டக்கல்லூரிமாணவர் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘கெஜ்ரிவாலை அவரது பதவிக்காலம் மற்றும் விசாரணை முடியும் வரை நிலுவையில் உள்ள அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ யால் பதிவு செய்யப்பட அனைத்து குற்ற வழக்குகளிலும் இருந்து இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு இன்று (22-04-24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மித் பிரீதம் சிங் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா, “இந்தப் பொதுநல வழக்கு முற்றிலும் அனுமதிக்க முடியாதது. மேலும், தவறான வழிகாட்டுதலானது. மனுதாரர், நீதிமன்றத்தை அரசியல் தளமாக்குகிறார். கெஜ்ரிவால் விரும்பினால், ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார். அப்படி இருக்கையில், அவருக்காக மனு தாக்கல் செய்ய இவர் யார்?. இது விளம்பர நோக்கம் கொண்ட வழக்கு ஆகும்” என்று வாதிட்டார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘கெஜ்ரிவாலுக்கு உங்கள் உதவி எதுவும் தேவையில்லை. அவருக்கு உதவ நீங்கள் யார்?.’ என்று தெரிவித்தனர். அப்போது, மனுதாரரின் தரப்பில் ஆஜரான கரண்பால் சிங், “முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட கெஜ்ரிவால் இல்லாததால் கடந்த ஒரு மாதமாக அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டு, மக்கள் அவதிப்படுகிறார்கள்” என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘கெஜ்ரிவால் சார்பாக மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த அதிகாரமும் இல்லை. மனுதாரர் சட்டக்கல்லூரி வகுப்புகளுக்கு செல்கிறாரா?. அவர் சட்டக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை என்று இதிலிருந்து தெரிகிறது’ எனக் கூறியும் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறியும் மனுதாரரின் ஜாமீன் மனுவைத்தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)