Court condemns Rahul Gandhi for allegation of Defaming the army

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, ‘இந்திய ஒற்றுமைப் பயணம்’ என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இந்த பயணத்தின் போது இந்திய ராணுவம் குறித்து ராகுல் காந்தி அவதூறாகப் பேசியதாகக் கூறி அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

கடந்த 2022 நடந்த இந்திய ஒற்றுமை பயணத்தின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் சென்ற ராகுல் காந்தி, அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இங்கேயும் அங்கேயும் இந்திய ஒற்றுமைப் பயணத்தைப் பற்றி மக்கள் கேட்பார்கள். அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் என்ன வேண்டுமானாலும் கேட்பார்கள். ஆனால் சீனா, 2,000 சதுர கி.மீ இந்தியப் பகுதி கைபற்றியது குறித்தும், 20 இந்திய வீரர்கள் கொன்றது குறித்தும், அருணாச்சலப் பிரதேசத்தில் நமது வீரர்களை தாக்கியது குறித்தும் ஒரு கேள்வி கூட அவர்கள் கேட்க மாட்டார்கள். ஏன், இதைப் பற்றி இந்திய பத்திரிகைகள் கூட அவர்களிடம் ஒரு கேள்வி கூடக் கேட்பதில்லை. இது உண்மையல்லவா? இதையெல்லாம் இந்த தேசம் பார்த்துக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு எதுவும் தெரியாது என்று பாசாங்கு செய்யாதீர்கள்” என்று கூறினார்.

Advertisment

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய வீரர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்று ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை விசாரித்த லக்னோ நீதிமன்றம், ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியது. தனக்கு வழங்கப்பட்ட சம்மனை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை அலகாபாத் நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது நீதிமன்றம் கூறியதாவது, ‘அரசியலமைப்பின் பிரிவு 19(1)(ஏ) படி, அனைவருக்கும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த சுதந்திரம் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. இந்திய ராணுவத்திற்கு அவதூறு விளைவிக்கும் கருத்துக்கள், பேச்சு சுதந்திரத்திற்குள் வராது’ என்று கூறி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது.