
கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரை, சாட்சியங்களில் முரண்பாடு இருப்பதால் அவர்களை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு பள்ளியின் அருகே ஆட்டோவுக்காக காத்திருந்தார். அங்கு வந்த ஆட்டோவில் ஏறியவுடன், வேறொரு கிராமத்திற்கு ஆட்டோ ஓட்டுநர் அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு, ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வேறு ஒரு ஆட்டோவில் ஏற்றிச் செல்ல வைத்துள்ளார். அதே நேரத்தில் இரண்டு ஆண்கள், மோட்டார் சைக்கிளில் ஆட்டோவை பின்தொடர்ந்து வந்துள்ளனர். அவர்கள் அந்த பெண்ணை, ஒதுக்குப்புறமான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று ஆணுறைகளைப் பயன்படுத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்டது. அதன் பிறகு, அந்த பெண்ணை ஒரு பேருந்து நிறுத்ததில் இறக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து, தனது வீட்டிற்கு சென்ற அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. குற்றம் சாட்டப்பட்ட 8 பேருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்புக்கு முக்கிய சாட்சியாக இருந்த அந்த பெண்ணும், அவரது தாயாரும் அரசு தரப்பை ஆதரிக்காமல் இருந்துள்ளனர். மேலும், புகார்தாரர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், நம்பகமற்ற ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க முடியாது என்று கூறி 8 பேரை மும்பை நீதிமன்றம் விடுவித்தது.
இது குறித்து மும்பை நீதிபதி ஜிஏ சனாப் கூறியதாவது, ‘ஆரம்பத்தில் அந்தப் பெண் குற்றம் சாட்டப்பட்டவரை குற்றஞ்சாட்டியிருந்தாலும், பின்னர் அவர் தன்னைத்தானே முரண்படுத்திக் கொண்டு, காவல்துறை அறிக்கை அழுத்தத்தின் கீழ் செய்யப்பட்டதாகக் கூறினார். நம்பகமற்ற ஆதாரங்களின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை விதிக்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளி என்று கருத அவர்களுக்கு எதிராக டிஎன்ஏ அறிக்கைகளையே பெரிதும் நம்பப்பட்டது. ஆனால், டிஎன்ஏ ஆதாரங்களின் நம்பகத்தன்மையை, சரிபார்க்க அரசு தரப்பு தவறிவிட்டது.
குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கும் முன் விசாரணை நீதிமன்றம் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். சாட்சியத்தின் ஒரு பகுதி, அரசு தரப்பு வழக்கோடு ஒத்துப்போனாலும், குற்றத்தை தீர்மானிப்பதில் சாட்சியின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மை மிக முக்கியமானது. குறைபாடுள்ள விசாரணைகள் அல்லது கட்டாய சாட்சியங்களின் அடிப்படையில் தவறான தண்டனைகள் ஏற்படாமல் இருப்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும்’ என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட 8 பேரை விடுவித்தார்.