Skip to main content

கரோனா காலத்தில் தேர்தல் பரப்புரை... கட்சிகளின் கருத்துகள், பரிந்துரைகளை வரவேற்கும் இந்தியத் தேர்தல் ஆணையம்!

Published on 18/07/2020 | Edited on 18/07/2020

 

coronavirus election campaign political parties suggestions election commission

 

கரோனா காலத்தில் தேர்தல் பரப்புரை செய்வது எப்படி? என்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் கருத்துகளை வழங்கலாம் என்று இந்தியத் தேர்தல் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. 

 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். 

 

மேலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் வெளியே வராமல் அவர்களின் குடும்பத்தினர் பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வரும் பொதுமக்கள் முகக் கவசம், சமூக இடைவெளி மற்றும் அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் பயன்படுத்தி கைகளைக் கழுவ வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

 

இந்த நிலையில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "தேர்தல் பரப்புரை, பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகள் பரிந்துரைகள் வழங்கலாம். தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் தங்களின் கருத்துகள், பரிந்துரைகளை வழங்கலாம். ஜூலை 31- ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் தங்களின் பரிந்துரைகளை அளிக்க வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளது. 

 

பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டிலும் (2020), தமிழ்நாடு, கேரளா, அசாம், ஜம்மு- காஷ்மீர், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டிலும் (2021) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்