puducherry corona rate

Advertisment

புதுச்சேரியில் கடந்த இரண்டு வாரங்களாக கரோனா தொற்றுநாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா தோற்றினால் பாதிக்கப்பட்டு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 95 பேர் குணமடைந்துள்ள நிலையில் 103 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் எனும் கோரிக்கை வலுவடைந்து வருகிறது. இதுகுறித்து புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் இன்று (15.06.2020) கூட்டறிக்கை விடுத்துள்ளன:

அந்த அறிக்கையில், “புதுச்சேரியில் கரோனா தொற்று வேகமாகப் பரவுவதால் முதல்கட்டமாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கை மத்திய - மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டுமென சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் வலியுறுத்தப்படுகிறது.

Advertisment

மக்கள் தொகை அடர்த்தியாகக் கொண்ட புதுச்சேரியில், ஆரம்பக் கட்டத்தைவிட கரோனா தொற்று தற்போது மிகவும் அதிகரித்து வருகிறது. இது மிகப் பெரும் அச்சத்தையும், பீதியையும், பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. கடந்த மார்ச் 23 ஊரடங்குதொடக்கத்தில், நோயின் அறிகுறி தென்படாத நிலையில், மிகவும் கண்டிப்புடன் செயல்பட்ட புதுச்சேரி அரசு, இன்றையசூழலில் அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்திவிட்டது. இதனால், நோய்த் தொற்று 200 பேரை தொட்டுவிட்டது. 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை மாநகரமே இன்று மிகப் பெரும் அபாயக் கட்டத்தில் இருப்பதைப் புதுச்சேரி அரசு உணர வேண்டும். அதேபோல், மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள சிறிய நகரமான புதுச்சேரி நோய்த் தொற்றின் மிகவும் அபாயகரமானக் கட்டத்திற்குச் சென்று கொண்டிருப்பதை அரசு கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ஏற்கனவே, அகில இந்திய அளவில் சர்க்கரை நீரிழிவு, ரத்த அழுத்த நோயாளிகள் அதிகம் உள்ள பகுதியாகப் புதுச்சேரி உள்ளது. இத்தகைய சூழலில் கரோனா தொற்று இவர்களையும் முதியவர்களையும் கடுமையாகத் தாக்கும் ஆபத்துள்ளது.

புதுச்சேரி மக்கள் நலன் கருதி அனைத்து பகுதி மக்களுக்கும் ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 7,500 வழங்க வேண்டும். அதேபோல் நோய்த் தொற்றைப் பரிசோதிக்க மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் போதுமான அளவில் தயார் நிலையில் வைக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளைப் பயன்படுத்த ஏதுவாக அவசர உத்தரவுப் பிறப்பிக்க வேண்டும். இவை அனைத்தையும் எதிர்வரும் சில நாட்களில் போர்க்கால அடிப்படையில் செய்து முடித்துவிட்டு, புதுச்சேரியில் முதல்கட்டமாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கை மிக கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் வெகுவாக குறைத்து மக்களைப் பாதுகாக்க முடியும்.

Advertisment

எனவே, புதுச்சேரி அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்துஅனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விரைவாக நிவாரணம் வழங்கி, அவர்களை வீட்டுக்குள்ளேயே இருக்கச் செய்வதன் மூலம் புதுச்சேரியை கரோனோ தொற்றிலிருந்து முழுமையாக பாதுகாக்க முடியும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டமைப்பில் மக்கள் வாழ்வுரிமை இயக்கம், திராவிடர் விடுதலை கழகம்,மீனவர் விடுதலை வேங்கைகள்,மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழர் களம், தமிழக வாழ்வுரிமைகட்சி, இராவணன் பகுத்தறிவு இயக்கம், செம்படுகை நன்னீரகம், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம், புதுச்சேரி தன்னுரிமைகழகம், புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்புகள் உள்ளன. மேலும் புதுச்சேரி வளர்ச்சி கட்சி, சிந்தனையாளர் பேரவை ஆகிய அமைப்புகளும் முழு ஊரடங்கை வலியுறுத்தியுள்ளன.