Corona vaccine sale ..! High Court orders Central Government to explain ..!

கரோனா தொற்றை குணப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை விற்பனைக்கு கொண்டு வரக் கோரிய மனுவுக்கு நாளை விளக்கமளிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கரோனா தொற்றை குணப்படுத்தும் வகையில் 2 டி.ஜி. எனும் மருந்தை, இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டு பிடித்துள்ளதாகவும், அதை சந்தைக்கு கொண்டு வரக்கோரியும் சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அனைத்து சோதனைகளும் முடிவடைந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் இந்த மருந்து உற்பத்திக்கு அனுமதியளித்துள்ளதாகவும், இதை மத்திய அமைச்சர், கடந்த மே மாதமே, விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். தினந்தோறும் கரோனா மரணங்கள் நிகழ்ந்து வருவதால் இந்த மருந்தை விரைந்து விற்பனைக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மருந்துக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்த போதும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகவும் வாதிட்டார்.

இதையடுத்து, கரோனா தொற்றை குணப்படுத்த உலக நாடுகளின் விஞ்ஞானிகள், மருந்து கண்டுபிடிக்க முயற்சித்து வரும் நிலையில், தற்போது கண்டுபிடித்துள்ள மருந்தை, பிற நிறுவனங்களும் உற்பத்தி செய்ய அனுமதியளித்து, விற்பனைக்கு கொண்டு வந்தால், மூன்றாம் அலையை எதிர்கொள்ள முடியும் எனத் தெரிவித்த நீதிபதிகள், மனு குறித்து நாளை விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.