ADVERTISEMENT

புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் கரோனா! முதல்வரை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்!

08:38 PM Jun 28, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரி முதலமைச்சரின் தனிச்செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றும் உருளையன்பேட்டையைச் சார்ந்த ஊழியருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நேற்று காலை முதல் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகம், அமைச்சர் அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் சட்டப்பேரவை வளாகம் மூடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையின் இரண்டு வாசல்களின் கதவுகளும் பூட்டப்பட்டு, யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமியை 5 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே "புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 29 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 648 ஆக உயர்ந்துள்ளது. இதில் புதுச்சேரியில் 28 நபர்களுக்கும், ஏனாமில் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 385 பேர் இந்திராகாந்தி மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 252 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் கோரிமேடு ஓய்வு பெற்ற 62 வயது காவலர் ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்ததையடுத்து மாநிலத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது" என்று சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT