/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/207_3.jpg)
கரோனா பாதித்த இளம்பெண்ணை மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் டிரைவர் சீரழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தைசேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அவரது 19 வயது மகளுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனா சிகிச்சைக்காக அவர்கள் இருவரும் அடூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் அந்த இளம்பெண்ணை கரோனா சிகிச்சை மையத்திற்கு கடந்த சனிக்கிழமை மருத்துவர்கள் மாற்றினர். இதையடுத்து அந்த இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் வாகனத்தில் டிரைவர் மட்டும் அழைத்துசென்றுள்ளார்.
அப்போது அரன்முழா பகுதியில் வாகனத்தை நிறுத்தி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணை சீரழித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், மருத்துவமனை வந்ததும் தனது தாயாரை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது தாயாரையும் கரோனா சிகிச்சை மையத்திற்கு மாற்றியுள்ளனர். தனது தாயார் கரோனா சிகிச்சை மையத்திற்கு வந்ததும் அவரிடம் நடந்ததை தெரிவித்திருக்கிறார் அந்த இளம்பெண்.
உடனே தனது மகளுக்கு ஏற்பட்ட நிலைமை குறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு அந்த பெண் தகவல் கொடுத்தார்,புகாராகவும் கொடுத்துள்ளார். இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவரான நவுபல் என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் அவர் ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துவதாக மாவட்ட போலீஸ் சூப்பரண்டு சைமன் கூறியுள்ளார்.
மாநில சுகாதாரத்துறை மந்திரி சைலஜா, குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஆம்புலன்ஸ் நிறுவனத்திற்கும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியதையடுத்து, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருக்கிறது.
இந்த சம்பவம் கேரளாவுக்கு அவமானம். இதற்கு பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா பதவி விலக வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் கூறியுள்ளார். கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி எப்படி ஆம்புலன்ஸ் வாகனத்தின் டிரைவராக நியமிக்கப்பட்டார். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)