2dg

கரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவிவரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இந்தநிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பும்(DRDO),டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் நிறுவனமும் இணைந்து தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவிலான மருந்து ஒன்றை உருவாக்கியது. சமீபத்தில் இந்த மருந்திற்கு அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனும் 2DG பவுடர் என அழைக்கப்படும் இந்த மருந்தைப் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினர். இந்நிலையில், இந்த மருந்தின் ஒரு பாக்கெட்டின் விலை 990 ரூபாய் என டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளுக்குத் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

Advertisment

இந்த மருந்தை மிதமான கரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கும் தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கும் மட்டுமே, அதுவும் மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும் எனவும், இந்த மருந்து மருத்துவமனைகளுக்கு மட்டுமே விற்கப்படும் எனவும், பொதுமக்களுக்கு அளிக்கப்படாது எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.