/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/arrest_30.jpg)
புதுச்சேரி கொம்பாக்கத்தில் உள்ளது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம். இந்தச் சங்கத்தில் கொம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பலர் தங்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர்.
இதனிடையே கூட்டுறவு கடன் சங்கத்தில் வருடாந்திர தணிக்கை முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனவும், முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து சங்க தலைவர் எம்பெருமாள் கடந்த 16ஆம் தேதி தணிக்கையாளர் இந்திரமோகனுடன் சங்க நிர்வாக பொறுப்பாளரும், முதுநிலை எழுத்தருமான பாப்பான்சாவடியை சேர்ந்த கதிரவன்(48) என்பவரிடம் சங்க கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யக் கூறினர்.
இதற்கு கதிரவன் சரியான பதில் அளிக்காததுடன் மறுநாள் 17ஆம் தேதி பணிக்கு வராமல் விடுப்பு எடுத்துக் கொண்டார். இதனால் சந்தேகமடைந்த எம்பெருமாள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை சந்தித்து சங்க கணக்குகளை ஆய்வு செய்ய வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து துணைப் பதிவாளர் தலைமையில் தணிக்கையாளர்கள் இந்திராமோகன், குப்புராமன், சிவசங்கர், திருநாவுக்கரசு, சந்தோஷ் குமார் அடங்கிய குழுவினர் சங்க பொறுப்பாளர் கதிரவனை சந்தித்து ஆய்வுக்கு அழைத்தனர். ஆனால் கதிரவன் ஆய்வுக்கு வர மறுத்து, நகை பாதுகாப்பு பெட்டகத்தின் சாவியை மட்டும் கொடுத்து அனுப்பினார்.
துணைப் பதிவாளர் முன்னிலையில் நகை பெட்டகம் திறந்து தணிக்கை செய்யப்பட்டது. அப்போது நகை கடன் கணக்குகளில் 198 கணக்குகள் மட்டுமே இருந்தன. அதிலும் 18 நகை கணக்கில் நகைகள் இல்லாமல் வெறும் பைகள் மட்டுமே இருந்தன. அவற்றில் இருந்த ரூபாய் 33 லட்சம் மதிப்புள்ள 588.50 கிராம் தங்க நகைகள் மாயமாகி இருந்தன. இதுகுறித்து சங்க நிர்வாக பொறுப்பாளர் கதிரவன் மீது சங்க தலைவர் எம்பெருமாள் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் மோசடி பிரிவில் வழக்கு பதிவு செய்து கதிரவனிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் கதிரவன் கடந்த பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். கொரோனா காலக்கட்டத்தில் ஏலச்சீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் கூட்டுறவு சங்கத்தில் வைக்கப்பட்ட நகையை எடுத்து வேறு இடங்களில் அடமானம் வைத்து செலவு செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து கதிரவனை கைது செய்த போலீசார் நகைகளை அடமானம் வைக்க கதிரவனுக்கு உதவியவர்களை தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)