
திருமணம் என்ற பெயரில் இந்து சமூக பெண்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள் லவ் ஜிகாத் செய்து அட்டூழியங்கள் செய்வதாக இந்து அமைப்பு ஒன்று நடத்திய ஊர்வலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நேற்று மகா சிவராத்திரி விழா கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அந்த வகையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு பீகார் மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்து அமைப்பான பஜ்ரங் தளம் அமைப்பு அலங்கார ஊர்வலம் நடத்தியது. 50க்கும் மேற்பட்ட அலங்கார ஊர்திகள் இடம்பெற்ற இந்த பிரமாண்ட ஊர்வலம், நகரம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மங்கேஷ்வர் நாத் மகாதேவ் கோயிலில் நிறைவடைந்தது. இந்த அலங்கார ஊர்தியில், இந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த செய்தித்தாள் துண்டுகள் இடம்பெற்றிருந்தன. ‘உங்கள் மதத்தை கைவிட்டால், நீங்கள் துண்டாடப்படுவீர்கள்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
மேலும், இந்து பெண்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள் அட்டூழியங்கள் செய்வதாக பா.ஜ.க கூறும் ‘லவ் ஜிகாத்’ என்பதை குறிக்கும் வகையில் இந்து பெண் உருவ பொம்மைகள் உடல்கள் துண்டு துண்டாக குளிர்சாதனப் பெட்டியில் இருந்தன. இந்த அலங்கார ஊர்தியில் இடம்பெற்றிருந்த காட்சிகள் சர்ச்சையாக மாறியுள்ளது. இதற்கு, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனங்கள் செய்து வருகின்றன.
திருமணத்தைப் பயன்படுத்தி இந்து சமூகத்தினரை, மற்ற சமூகத்தினர் கட்டாய மத மாற்றம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை பா.ஜ.க தொடர்ந்து முன்வைத்து வருகிறது. அவ்வாறு கட்டாயம் மத மாற்றங்கள் செய்பவர்களை ‘லவ் ஜிகாத்’ என்று பா.ஜ.க பொதுவாக அழைத்தது. அதனை தடுக்கும் விதமாக உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.