Skip to main content

''குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்; ஜெய் ஹிந்த்'' - ராகுலுடன் கைகோர்த்த கமல்ஹாசன்

Published on 24/12/2022 | Edited on 27/12/2022

 

 "Contribution as a citizen is always there. Jai Hind" - Kamal Haasan joins hands with Rahul


கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைக் கடந்து தற்பொழுது டெல்லியில்  இருக்கும் ராகுல் காந்தி அங்கிருந்து உத்தரப் பிரதேசம் செல்கிறார்.

 

ஜனவரி 26 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் பயணத்தை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிற நிலையில் நடிகர் கமல்ஹாசன் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் இணைய இருப்பதாக அண்மையில் தகவல்  வெளியாகி இருந்தது. அதன்படி தற்போது ராகுல் காந்தியின் பேரணியில் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார். தற்போது டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் காந்தியடிகளின் நினைவிடத்திற்குச் சென்று இருவரும் மரியாதை செலுத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் பேரணியில் மக்கள் நீதி மையத்தின் கட்சி தொண்டர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் பேரணி இன்று செங்கோட்டையில் நிறைவு செய்யப்பட்டு மீண்டும் ஜனவரியில் தொடங்கப்பட இருக்கிறது.

 

இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், ''இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க அன்புச் சகோதரர் ராகுல்காந்தி முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் நானும், நிர்வாகிகளும் கலந்துகொள்கிறோம். மண், மொழி, மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்.ஜெய் ஹிந்த்!'' எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவைப் புரிந்து கொள்ள  நினைக்கும் போதெல்லாம் தமிழகத்தைப் பார்க்கிறேன்'  -நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Whenever I think to understand India, I look at Tamil Nadu' - Rahul Gandhi's speech in Nellai

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதனையொட்டி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக இன்று (12.04.2024) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தமிழ்நாடு வந்துள்ளார். சிறப்பு விமானத்தின் மூலம் மதுரை வந்த ராகுல்காந்தி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கோவை செல்ல இருக்கிறார்.

நெல்லை வந்துள்ள ராகுல் காந்தியை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டையில்  இந்தியா கூட்டணி சார்பில்  நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 நாடாளுமன்ற கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து  நடைபெறும் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பாடலை வெளியிட்டார். 

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், ''எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள விரும்புகிறேனோ அப்போதெல்லாம் தமிழகத்தை பார்க்கிறேன். தமிழகத்தையும், தமிழக மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன்.  தமிழகத்தை விரும்புவதால் தான் எனது யாத்திரையை  நான் குமரியில் இருந்து தொடங்கினேன். தமிழக கலாச்சாரம், பண்பாடு என்னை கவர்ந்துள்ளது. என் மீது தமிழக மக்கள் அன்பை பொழிந்துள்ளனர். பெரியார், காமராஜர், அண்ணாதுரை, கலைஞர் ஆகியோர் தமிழ்நாட்டின் ஆளுமைகள். ஒருபுறம் பெரியார் உள்ளிட்டோர் போதித்த சமூக நீதி மறுபுறம் மோடியின் வெறுப்புணர்வு. இரண்டு தத்துவங்களுக்கு இடையே நடைபெறும் மோதல் இந்தத் தேர்தல். நம்மைப் பொறுத்தவரை இந்தியாவின் எல்லா கலாச்சாரமும் பண்பாடும் மிகப் புனிதமானது என்று கருதுகிறோம். ஆனால் அவர்களோ ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி என்பதில் குறிக்கோளாக இருக்கிறார்கள். இதனுடைய முடிவு என்னவென்றால் இந்த நாட்டில் இருக்கின்ற இளைஞர்களில் 83% பேர் வேலையில்லாமல் திண்டாட்டத்தை சந்தித்துள்ளார்கள். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாநில அரசுகள் விரும்பினால் மட்டுமே நீட் தேர்வு தொடரும். வேலையில்லாத டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளுக்கும்  வேலைவாய்ப்பு பயிற்சி சட்டம் நிறைவேற்றப்படும். வந்த உடனே காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி தர மறுத்துவிட்டது. தேர்தல் ஆணையர்களை பிரதமர் தான் தேர்வு செய்கிறார். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு, மீனவர்கள், விவசாயிகளுக்கு மத்திய அரசு எதையும் செய்யவில்லை. ஆனால் நாட்டின் 25 பெரும் பணக்காரர்கள் 70% மக்களின் பணத்தை வைத்துள்ளனர். கோடீஸ்வரர்களின் 16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். அனைத்து துறைமுகங்கள், மின்சார தயாரிப்பு நிறுவனங்களை  அதானியிடம் ஒப்படைக்கிறார் மோடி. நாட்டின் அனைத்து அமைப்புகள், முகமைகள் ஆர்எஸ்எஸ் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. நாட்டின் அரசியல் சாசனத்தையே மாற்றுவேன் என்கிறது பாஜக'' என்றார்.

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.