
உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் நவம்பர் 16 ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 20 ஆம் தேதி வரை 'காசி தமிழ் சங்கமம்' என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் இலக்கியம், ஆன்மீகம், கலை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது. 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சியை அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில் தமிழுக்கும் காசிக்குமான இணைப்பு ஆண்டாண்டு காலமாகத் தொடர்வதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி திருக்காஞ்சியில் உள்ள கங்கை வராக நதீஸ்வரர் கோவிலிலிருந்து 300க்கும் மேற்பட்டோர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற இருக்கும் காசி சங்கமம் நிகழ்ச்சிக்குச் செல்ல இருக்கின்றனர். இந்நிலையில் அக்கோவிலில் சாமி தரிசனம் செய்த தமிழிசை சவுந்தரராஜன் , “தமிழுக்கும் காசிக்குமான இணைப்பு ஆண்டாண்டு காலமாகத் தொடர்வதாகத்” தெரிவித்தார்.
'காசி சங்கமம் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் சார்பில் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களைக் குறிப்பாக ஐஐடியில் படிக்கக் கூடிய மாணவர்களை ஆர்.எஸ்.எஸ்-ல் சேர்க்கக்கூடிய முயற்சி என்ற அடிப்படையில்தான் இந்த முயற்சி நடைபெறுகிறது. எனவே இந்த நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.