Skip to main content

வேட்பாளர் தேர்வில் அதிருப்தி; காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜினாமா!

Published on 10/03/2021 | Edited on 10/03/2021

 

pc chacko

 

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 140 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்தெடுக்க நடைபெறவுள்ள இந்த தேர்தலின் முடிவுகள் மே இரண்டாம் தேதி வெளியாகவுள்ளது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஐக்கிய இடது முன்னணி கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிசி சாக்கோ, அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தைக் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார்.

 

பிசி சாக்கோ அந்தக் கடிதத்தில், "கட்சிக்காக நான் கடுமையாக உழைத்தேன். ஆனால் கேரள காங்கிரஸ் அணியுடன் இணைந்து பணியாற்றுவது உண்மையாகவே கடினம். காங்கிரஸ் எடுத்த ஒவ்வொரு முடிவிற்கும் நான் ஆதரவாக நின்றேன். ஆனால் தற்போது மிகவும் கடினம். முக்கியமான ஒருவரை மட்டும் வைத்துக்கொண்டு நீங்கள் கட்சி நடத்த முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் காங்கிரஸ் கட்சியில் குருப்பிசம் (groupsim) இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், வேட்பாளர் பட்டியல் குறித்து மாநில காங்கிரஸ் கமிட்டியிடம் விவாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அவரது விலகல் காங்கிரஸ் கட்சிக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்