Advertisment

“சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்பும் எவருக்கும் நாங்கள் ஒத்துழைப்பு தர மாட்டோம்” - காங்கிரஸ் திட்டவட்டம்

Congress says We will not cooperate with anyone who spreads hatred in the society

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த இந்திய அளவில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. ‘இந்தியா’ (INDIA) எனப் பெயரிடப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாட்னா, பெங்களூரூ, மும்பை என மாநிலத்தின் அடுத்தடுத்த இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகிறது. இந்தியா கூட்டணியின் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முடிவடைந்த நிலையில், அதன் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று டெல்லியில் சரத்பவார் இல்லத்தில் நடைபெற்றது. கே.சி. வேணுகோபால், டி.ஆர். பாலு உட்பட 14 பேர் இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisment

இந்த கூட்டத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தை மத்தியப் பிரதேசத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டது. அதில், இந்தியா கூட்டணி சில தொலைக்காட்சி தொகுப்பாளர்களின் நிகழ்ச்சியைப் புறக்கணிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. எந்தெந்த தொகுப்பாளர்களின் நிகழ்ச்சி என்று 14 பேர் கொண்ட விவரத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து, காங்கிரஸ் தங்களது செய்தி தொடர்பாளர்களைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுப்பாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மீடியா சேனல்கள் மற்றும் எடிட்டர்கள் காங்கிரஸ் பிரதிநிதியாக யாரையும் அழைக்க வேண்டாம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரன்தீப் சுர்ஜேவாலா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் சங்கம், இந்தியா கூட்டணி எடுத்த முடிவால் வேதனையும், கவலை அளிப்பதாகவும் தெரிவித்தது. மேலும், சில ஊடகவியலாளர்கள் மற்றும் அறிவிப்பாளர்களை புறக்கணிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிக் கூட்டணியை வலியுறுத்துகிறது என்று தெரிவித்தது. அதேபோல், பா.ஜ.க தரப்பில் இந்தியா கூட்டணி எடுத்த முடிவுக்கு தங்களது கண்டனத்தைத் தெரிவித்தது. இது குறித்து பா.ஜ.க சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா கூட்டணி சில ஊடகவியலாளர்களைப் புறக்கணிப்பது மற்றும் அச்சுறுத்தல் விடுத்துள்ளது. இத்தகைய முடிவுகளை எடுத்ததன் மூலம் தனது அடக்குமுறை, சர்வாதிகார மற்றும் எதிர்மறையான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது. கருத்து சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் இத்தகைய இழிவான மனநிலையை பா.ஜ.க கடுமையாக எதிர்க்கிறது” என்று தெரிவித்தது.

இந்த நிலையில், தெலங்கானாவின் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள ஹைதராபாத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில்முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, காரிய கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பவன் கேரா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் சில தொகுப்பாளர்களின் நிகழ்ச்சிபுறக்கணிப்பு பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “ நாங்கள் யாரையும் தடை செய்யவோ புறக்கணிக்கவோ இல்லை. இது ஒத்துழையாமை இயக்கம். அதனால் சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்பும் எவருக்கும் நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம். அவர்கள் எங்களுக்கு எதிரி இல்லை. எதுவும் நிரந்தரம் இல்லை. அதனால், அவர்கள் செய்வது இந்தியாவுக்கு நல்லதல்ல என்பதை நாளை ஒருவேளை அவர்கள் உணர்ந்தால், நாங்கள் மீண்டும் அவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத்தொடங்குவோம்” என்று கூறினார்.

boycott journalists congress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe