Skip to main content

பிரதமர் மோடியை மீண்டும் பாராட்டிய காங்கிரஸ் எம்.பி சசி தரூர்; சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு!

Published on 28/05/2025 | Edited on 28/05/2025

 

Congress MP Shashi Tharoor praises PM Modi and criticism from his own party

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா கடந்த மே 7ஆம் தேதி நள்ளிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது. மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக கடந்த 10ஆம் தேதி இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது. அதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது.

இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகவும், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தஞ்சம் அளிப்பது, நிதி உதவி வழங்குவது உள்ளிட்ட தகவல்கள் குறித்தும் உலக நாடுகளுக்கு ஆதாரங்களுடன் விளக்கமளிக்க அனைத்துக் கட்சி எம்.பிக்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, எம்.பிக்கள் அடங்கிய குழுக்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தலைவர்களைச் சந்தித்து விளக்கமளித்து வருகின்றனர். 

Congress MP Shashi Tharoor praises PM Modi and criticism from his own party

அதன் ஒரு பகுதியாக திருவனந்தபுரம் எம்.பியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் தலைமையிலான குழு கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் தற்போது காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையிலான குழு பனாமா நகரில் அங்குள்ள தலைவர்களைச் சந்தித்து பாகிஸ்தான் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர். அதில் சசி தரூர் கூறியதாவது, “கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக நாங்கள் தாக்குதல்களுக்குப் பிறகு தாக்குதலைச் சந்தித்து வருகிறோம். வலி, துக்கம், காயங்கள், இழப்புகளைத் தொடர்ந்து தாங்கிக் கொண்டு, பின்னர் சர்வதேச சமூகத்திடம் சென்று, எங்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள். குற்றவாளிகளை அடையாளம் கண்டு வழக்குத் தொடர குற்றவாளிகள் மீது அழுத்தம் கொடுங்கள்.

சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்னவென்றால், பயங்கரவாதிகளும் தாங்கள் ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்துள்ளனர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியா முதல் முறையாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி, செப்டம்பர் 2015 இல் உரி தாக்குதலின் போது ஒரு பயங்கரவாத தளமான ஏவுதளத்தின் மீது ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியது. அது ஏற்கனவே நாம் இதற்கு முன்பு செய்யாத ஒன்று. கார்கில் போரின் போது கூட, நாங்கள் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடக்கவில்லை; உரியில், நாங்கள் அதைச் செய்தோம், பின்னர் 2019 ஜனவரியில் புல்வாமாவில் தாக்குதல் நடந்தது. அப்போது, நாங்கள் கட்டுப்பாட்டுக் கோட்டை மட்டுமல்ல, சர்வதேச எல்லையையும் தாண்டி, பாலகோட்டில் உள்ள பயங்கரவாத தலைமையகத்தைத் தாக்கினோம். இந்த முறை, அந்த இரண்டையும் தாண்டிச் சென்றுள்ளோம். நாங்கள் கட்டுப்பாட்டுக் கோட்டையும் சர்வதேச எல்லையையும் தாண்டிச் சென்றது மட்டுமல்லாமல், பாகிஸ்தானின் பஞ்சாபி மையப்பகுதியில் ஒன்பது இடங்களில் பயங்கரவாத தளங்கள், பயிற்சி மையங்கள், பயங்கரவாத தலைமையகங்களைத் தாக்கியுள்ளோம். எங்களது பிரதமர் இதை மிகத் தெளிவாகச் செய்துள்ளார். பயங்கரவாதிகள் வந்து 26 பெண்களின் நெற்றியில் இருந்த குங்குமத்தைத் துடைத்து, அவர்களின் கணவர்களை கொன்றதால், ஆபரேஷன் சிந்தூர் அவசியமானது. உண்மையில், சில பெண்கள் பயங்கரவாதிகளிடம், ‘என்னையும் கொல்லுங்கள்’ என்று கூச்சலிட்டனர். நாங்கள் கேட்டோம், அவர்களின் அழுகையைக் கேட்டோம், இதனால் இந்தியா, சிந்தூரின் நிறம், நமது பெண்களின் நெற்றியில் உள்ள குங்குமப்பூ நிறம்,  தாக்குதல் நடத்தியவர்களின் இரத்தத்தின் நிறத்துடன் பொருந்த வேண்டும் என்று முடிவு செய்தது” என்று கூறினார். 

Congress MP Shashi Tharoor praises PM Modi and criticism from his own party

மத்திய பா.ஜ.க அரசு நடத்திய ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் பிரதமர் மோடி குறித்து மூத்த தலைவர் சசி தரூர் மீண்டும் மீண்டும் பாராட்டி பேசி வருவது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாராட்டிப் பேசிய சசி தரூரின் கருத்துக்கள், கட்சித் தலைமையும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், காங்கிரஸ் மூத்த தலைவரான பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காலத்தில் பல சர்ஜிக்கல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறும் வீடியோவில் சசி தரூரை டேக் செய்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் கூறுகையில், “காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பாஜகவின் சூப்பர் செய்தித் தொடர்பாளர். அவர் பாஜக தலைவர்களை விட மோடியை அதிகமாக புகழ்கிறார். முந்தைய அரசாங்கங்கள் என்ன செய்தன என்பது அவருக்குத் தெரியுமா? அவர்கள் இந்திய ஆயுதப் படைகளுக்கு பெருமை சேர்க்கிறார்கள். பாஜகவின் விளம்பர ஸ்டண்டுகளுக்கு தரூர் செய்தித் தொடர்பாளராக மாறிவிட்டார்” என்று விமர்சனம் செய்தார். 

சமீப காலங்களில் பிரதமர் மோடியையும், கேரளா அரசையும்  சசி தரூர் தொடர்ந்து பாராட்டி பேசி வருவது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரை சசி தரூர் பாராட்டி பேசியிருந்தார். பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மத்திய அரசு நடத்திய தாக்குதல் சிறப்பானவை என்றும், பாகிஸ்தானுடனான பிரச்சனையை பிரதமர் மோடி திறமையாகக் கையாண்டார் என்றும் இதற்கான முழு மதிப்பெண்களையும் அவருக்கு கொடுக்கிறேன் என்று பிரதமர் மோடியையும், மத்திய பா.ஜ.க அரசையும் வெகுவாக பாராட்டிப் பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு, காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து எதிர்ப்பு கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்