Skip to main content

அரசியலமைப்பின் முன்னுரையில்  ‘மதச்சார்பற்ற, சோசியலிசம்’ இல்லை; காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Congress MP Accusation on the Preamble of the Constitution does not contain 'Secular, Socialism'

 

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் வழக்கம்போல் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று (19.9.2022) முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்புக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி  நேற்று புதிய நாடாளுமன்றத்தில் முதல் அமர்வு நடைபெற்றது.

 

அதே சமயம் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மாநிலங்களவையில் ஒப்புதலையும் பெற்றிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த மசோதா நிலுவையிலேயே உள்ளது. இதையடுத்து இந்த மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குக் கொண்டு வந்து மகளிர்க்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

இந்நிலையில் புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில்  நேற்று (19-09-23) தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். அதில் பெண்களுக்கு ஆதாரமளிக்கும் இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த மசோதா மீதான விவாதம் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தில், சோனியா காந்தி, கனிமொழி உள்ளிட்டோர் பேசி வருகின்றனர்.

 

இந்த நிலையில், நேற்று (19-09-23) புதிய நாடாளுமன்றத்தில் நடந்த முதல் கூட்டத்தின் போது தங்களுக்கு வழங்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் ‘மதச்சார்பற்ற’ , மற்றும் ‘சோசியலிச’ போன்ற வார்த்தைகள் நீக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்திரி குற்றம் சாட்டியுள்ளார். 

 

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆதிர் ரஞ்சன் செளத்திரி, “ எங்களுக்கு வழங்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு நகல்களை கொண்டு புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்தோம். ஆனால், அந்த நகலின் முன்னுரையில் ‘மதச்சார்பற்ற’ மற்றும் ‘சோசியலிச’ போன்ற வார்த்தைகள் இல்லை. 1976ஆம் ஆண்டுக்கு பின்னர் தான் இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டியிருக்கின்றன என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், தற்போது இந்த வார்த்தைகள் நீக்கப்பட்டியிருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. மத்திய அரசு இந்த மாற்றத்தை மிகவும் புத்திசாலித்தனமாக செய்துள்ளனர். மேலும், அவர்களின் நோக்கம் மிகவும் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முயன்றேன். ஆனால், அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்குப்பதிவு சதவீதம் குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Election Commission official notification regarding polling percentage

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக  தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அதாவது, திருவள்ளூர் - 68.59 %, வட சென்னை - 60.11 %, தென் சென்னை - 54.17 %, மத்திய சென்னை - 53.96 %, ஸ்ரீபெரும்புதூர் - 60.25 %, காஞ்சிபுரம் - 71.68 %, அரக்கோணம் -74.19 %, வேலூர் - 73.53 %, கிருஷ்ணகிரி - 71.50, தருமபுரி - 81.20 %, திருவண்ணாமலை - 74.24 %, ஆரணி - 75.26 %, விழுப்புரம் - 76.52 %, கள்ளக்குறிச்சி - 79.21 %, சேலம் - 78.16 %, நாமக்கல் - 78.21 %, ஈரோடு - 70.59 %, திருப்பூர் - 70.62 %, நீலகிரி - 70.95 %, கோயம்புத்தூர் - 64.89 %, பொள்ளாச்சி - 70.41 %, திண்டுக்கல் - 71.14 %, கரூர் - 78.70 %, திருச்சிராப்பள்ளி - 67.51 %, பெரம்பலூர் - 77.43 %, கடலூர் - 72.57 %, சிதம்பரம் - 76.37%, மயிலாடுதுறை - 70.09 %, நாகப்பட்டினம் - 71.94 %, தஞ்சாவூர் - 68.27 %, சிவகங்கை - 64.26 %, மதுரை - 62.04 %, தேனி - 69.84 %,விருதுநகர் - 70.22 %, ராமநாதபுரம் - 68.19 %, தூத்துக்குடி - 66.88 %, தென்காசி - 67.65 %, திருநெல்வேலி - 64.10 % மற்றும் கன்னியாகுமரி - 65.44 % பதிவாகியுள்ளன. 

Next Story

அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு ஆலோசனை!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
ADMK Constituency Committee Advice

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

அந்த வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் முன்னாள் அமைச்சர்களான கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி மற்றும் பென்ஜமின் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக் குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளது. இந்த கூட்டத்திற்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி தலைமை தாங்க உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து ஆலோசிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக் குழுவினருடன் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் எனப்பலரும் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.