Congress moves Supreme Court against Waqf Act Amendment Bill

Advertisment

நாடாளுமன்ற மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ நேற்று முன்தினம் (02.04.2025) தாக்கல் செய்தார். இந்த விவாதத்திற்கு திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. சுமார் 12 மணி நேரத் தொடர் விவாதத்திற்குப் பிறகு, நள்ளிரவு நேரத்தில் திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதன்படி இந்த மசோதாவிற்கு ஆதரவாக 288 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக 232 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த மசோதா மக்களவையில் நேற்று (03.04.2025) அதிகாலை நிறைவேறியது. இதனையடுத்து மாநிலங்களவையிலும் வாக்கெடுப்பு மூலம் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் 128 எம்.பி.களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் 98 எம்பிக்கள் எதிராக வாக்களித்தனர். இருப்பினும் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் இந்த மசோதாவிற்கு நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக திமுக, அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்தனர். மசோதாவின் மீது பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை ஆதரவாகவும் பேசாமல் எதிராகவும் பேசாமல் மசோதாவை எதிர்த்து வாக்களித்தார். அதே சமயம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் மசோதாவை ஆதரித்து வாக்களித்தார். பா.ம.க. தலைவர் அன்புமணி இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. நியமன எம்பியாக தேர்வு செய்யப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா மசோதாவை ஆதரித்து வாக்களித்ததாகத் தகவல் வெளியாகியிருந்தது.

Advertisment

இந்நிலையில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதாவது அக்கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஜாவேத் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு பட்டியலிடப்பட்டு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அக்கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.