பழங்குடி சமூகத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறி காங்கிரஸ் எம்.எல்.ஏ விடுதி வளாகத்திற்குள் புகுந்து பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


திரிபுரா மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏவாகப் பொறுப்பு வகித்து வருபவர் சுதிப் ராய் பர்மன். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இவர், “பா.ஜ.க தலைவர்கள் பழங்குடி சமூகத்தினர் மீது சிறுநீர் கழிக்கிறார்கள்” என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இவரது பேச்சு, மாநிலத்தில் உள்ள பழங்குடி சமூகம் மற்றும் பா.ஜ.க தலைவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடி சமூகத்தினர் இழிவான கருத்துக்களை காங்கிரஸ் எம்.எல்.ஏ சுதிப் ராய் பர்மன் கூறியதாக பா.ஜ.க தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக, பா.ஜ.க பழங்குடியின தலைவரும் மாநில பொதுச் செயலாளருமான பிபின் தேப்பர்மா, நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் ஆதரவுடன் அகல்தலாவில் உள்ள சுதிப் ராய் பர்மனின் வீட்டின் உடைத்து வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். போராட்டக்காரர்கள் அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். மேலும், பழங்குடி சமூகத்தினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததற்காக சுதிப் ராய் மன்னிப்பு கேட்டு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். 

இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து பா.ஜ.க தலைவர் பிபின் தேப்பர்மா கூறுகையில், “இது போன்ற கருத்துக்கள் அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் இழிவானது. எம்.எல்.ஏவாகவும், மூத்த தலைவராகவும் இருக்கும் ஒரு நபர் பழங்குடியின மக்களின் கண்ணியத்தைத் தாக்கிப் பேசியுள்ளார். இதற்காக அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்” என்று கூறினார். பழங்குடி சமூகத்திற்கு எதிராக கருத்துக்களைக் கூறியதாகக் கூறப்படும் இந்த சம்பவம் திரிபுரா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. 

Advertisment