/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a1846.jpg)
இரண்டு நாட்களாக அரசியல் சாசனம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பல்வேறு உறுப்பினர்கள் உரையாற்றினார். அரசியல் சாசனம் தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்றத்தில் தற்போது மோடி உரையாற்றி வருகிறார். அவரது பதிலுரையில், ''இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு மிகப்பெரிய தொலைநோக்கு சிந்தனை இருந்தது. அதன் அடிப்படையாகக் கொண்டு நாம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.
ஜனநாயகத்தின் திருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 75 ஆண்டுகால பயணம் என்பது சாதாரண ஒரு நிகழ்வு அல்ல, மிகவும் அரிதான நிகழ்வு. ஜனநாயகத்தின் தாய் என்று இந்தியா அழைக்கப்படுகிறது. அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் நாம் கொண்டாட வேண்டிய நேரம் இது. காலங்களைக் கடந்து இந்திய அரசியல் சாசனத்தின் வலிமை நிற்கிறது. அரசியல் சாசனத்தை வடிவமைத்ததில் பெண்கள் மிக முக்கிய பங்காற்றியுள்ளனர். இந்தியாவில் தான் சுதந்திரம் பெற்ற உடனே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. இன்றும் மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களிலும் மையமாக பெண்கள் இருக்கின்றனர். குடியரசுத் தலைவரே பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண் தான். கல்வி, வேலை வாய்ப்பு, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒற்றுமை என்பது மிகவும் அவசியமானது. 100 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது, இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுத்திருக்கும். விரைவில் உலகின் மூன்றாவது பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்'' என்றார்.
தொடர்ந்து காங்கிரஸ் மீதான பல்வேறு விமர்சனங்களையும் குற்றசாட்டுகளையும் மோடி வைத்தார். ''காலனி ஆதிக்க மனநிலையில் காங்கிரஸ் இருந்து வருகிறது. அரசமைப்புச் சட்டம் குறுக்கிட்டால் அதை மாற்ற வேண்டும் என குறிப்பிட்டவர் முன்னாள் பிரதமர் நேரு. அப்போதைய குடியரசுத் தலைவர், சபாநாயகர் சரியான பாதையில் நேருவிற்குவழிகாட்ட முயன்றனர். காங்கிரஸ் நாட்டையே சிறையாக மாற்றியது. (அவசர நிலையை குறிப்பிட்டு) பிரதமர் பதவியை காப்பாற்ற அவசர நிலையை இந்திரா காந்தி அறிவித்தார். காங்கிரஸ் குடும்பம் தான் அரசியல் சாசனத்தை வெகுவாக காயப்படுத்தியது. காங்கிரஸ் கட்சியின் பாவங்களுக்கு இனி விமோசனமே இல்லை. அரசமைப்பு தொடர்பான அவையில் சுமுகமாக விவாதம் நடைபெற்றிருக்க வேண்டும். அவையில் சுமுக விவாதம் நடந்திருந்தால் இளைய தலைமுறையினர் பயனடைந்திருப்பர்'' என்றார்.
காங்கிரஸ் குறித்த மோடியின் விமர்சன பேச்சுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதனால்அவையில் சற்று பரபரப்பு நிலவியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)