காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்ட 135 ஆவது ஆண்டு விழாவை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இதற்காக நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பேரணிகள் மற்றும் பொது கூட்டங்கள் நடத்தப்பட்டது.
இதில் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். அசாம் மாநிலம் குவாஹாத்தியில் ராகுல் காந்தி, திருவனந்தபுரத்தில் ப.சிதம்பரம், லக்னோவில் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் லக்னோவில் நடைபெற்ற விழாவில் பிரியங்கா காந்தி மேடையில் அமர்ந்திருந்த போது, திடீரென ஒரு நபர் பாதுகாப்புகளை மீறி மேடையில் ஏறி பிரியங்காவிடம் பேச முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாவலர்கள் மற்றும் உடனிருந்தவர்கள் அந்த நபரை அப்புறப்படுத்த முற்பட்ட நிலையில், அந்த நபரிடம் பேசிய பிரியங்கா காந்தி, பின்னர் அந்த நபருக்கு கை கொடுத்து அனுப்பி வைத்தார். பலத்த பாதுகாப்பையும் மீறி பிரியங்கா காந்தி இருந்த மேடையில் திடீரென ஒருவர் ஏறியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.