Skip to main content

"வரலாறு இல்லாதவர்கள் மற்றவர்களின் வரலாற்றை அழிக்க முயல்கின்றனர்" - மல்லிகார்ஜூன கார்கே

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

congress chief mallikarjuna kharge tweet about nehru memorial name issue related 

 

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த வரை தனது அதிகாரப்பூர்வ இல்லமாக தீன் மூர்த்தி பவனில் 16 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு இந்த இல்லத்தில் தான் கடந்த 1964 ஆம் ஆண்டு முதல் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் செயல்பட்டு வந்தது. ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை குறிப்புகள் மற்றும் நேருவின் சுதந்திர போராட்டங்கள் குறித்த முக்கிய தகவல்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.

 

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவின் 14 முன்னாள் பிரதமர்களின் வாழ்க்கை வரலாறுகள் பற்றிய தகவல்களுடன் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் பற்றிய நிர்வாக முடிவுகளை எடுக்க என்.எம்.எம்.எல். சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். இதன் துணை தலைவராக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளார். மேலும், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான், நிர்மலா சீதாராமன், அனுராக் தாக்கூர் உள்ளிட்ட 29 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

 

இந்நிலையில் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் இந்த வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பெயரை நீக்குவது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், இனிமேல் பிரதமர்கள் அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், “வரலாறு இல்லாதவர்கள் இப்போது மற்றவர்களின் வரலாற்றை அழிக்க முயல்கின்றனர். நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை மாற்றுவது என்பது மோசமான முயற்சி. நவீன இந்தியாவின் சிற்பி மற்றும் ஜனநாயகத்தின் அச்சமற்ற கண்காணிப்பாளரான பண்டித ஜவஹர்லால் நேருவின் ஆளுமையை இதன் மூலம் குறைத்துவிட முடியாது. இது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கீழ்த்தரமான மனநிலையையும் சர்வாதிகாரப் போக்கையும் காட்டுகிறது. மோடி அரசாங்கத்தின் குறுகிய சிந்தனையால் இந்தியாவுக்கு ஜவஹர்லால் நேரு வழங்கிய பெரும் பங்களிப்பை குறைக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்