congress about chinese contribution to pm cares fund

Advertisment

'பி.எம். கேர்ஸ்' மூலம் சீன நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் நிதி பெற்றதற்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் எனக் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டும் வகையில், பிரதமர் மோடி தொடங்கிய 'பி.எம். கேர்ஸ்' கணக்கு தொடர்பாகக் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டிவந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து குறிப்பிட்ட அளவு நிதியை ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு வழங்கியதைச் சுட்டிக்காட்டி பா.ஜ.க.வை காங்கிரஸைக் குற்றம்சாட்டியது. இதனைத்தொடர்ந்து 'பி.எம். கேர்ஸ்' கணக்கிற்குச் சீனாவிலிருந்து நன்கொடை பெறப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் நேற்று குற்றம் சாட்டியது. 'டிக் டாக்', 'சியோமி', 'ஓப்போ' உள்ளிட்ட நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாயை 'பி.எம். கேர்ஸ்' கணக்கில் செலுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து கேள்வியெழுப்பியுள்ள காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, "இந்திய வரலாற்றில் கடந்த 13 ஆண்டுகளில் எந்தக் கட்சியின் தலைமையும் சீனாவுடன் அதிக தொடர்பு வைத்திருக்கவில்லை. ஆனால் பா.ஜ.க. தலைமை கடந்த 2007-ஆம்ஆண்டு முதல் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்து வருகிறது.ராஜ்நாத் சிங் கடந்த 2007, 2008-ஆம் ஆண்டுகளில் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஆலோசனைகள் நடத்தினார். நிதின் கட்காரி 2011-ஆம் ஆண்டு சீனாவுக்கு ஐந்து நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். அமித்ஷாவோ கடந்த 2014-ஆம் ஆண்டு பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றைச் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பயிற்சி முகாம் ஒன்றுக்காக அனுப்பி வைத்தார்.

Advertisment

இந்த அரசுக்கு நாட்டின் பாதுகாப்பு முக்கியமில்லை. அவர்களுக்கு நான், எனது என்ற எண்ணமும், ராஜீவ்காந்தி அறக்கட்டளையும்தான் முக்கியம். உண்மை என்னவென்றால், பிரதமர் மோடி கரோனா நிதிக்குச் சீன நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் நன்கொடை பெற்றுள்ளார். கடந்த மாதம் 20-தேதிக்குள் 'பி.எம். கேர்ஸ்' கணக்கில் ரூ.9,678 கோடி நிதி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், சீனப் படைகள் இந்தியாவுக்குள் ஊடுருவியிருக்கும் நேரத்திலும், சீன நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறப்பட்டிருக்கிறது. சீன நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் நிதி பெறுவதில் பிரதமர் சமரசம் ஆகிறார் என்றால், எப்படி அவர் சீனாவின் ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டைப் பாதுகாப்பார்? இதற்குப் பிரதமர் மோடி பதில் கூற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.