ADVERTISEMENT

ஆளுநர் மீது காவல் நிலையங்களில் அடுத்தடுத்து கொடுக்கப்படும் புகார்கள்! செய்வதறியாது திகைக்கும் காவல் அதிகாரிகள்!

08:14 AM Dec 20, 2019 | kalaimohan

புதுச்சேரி சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு ஆய்வுகள் என்ற பெயரில் ஆளுநர் கிரண்பேடி சட்டத்திற்கு புறம்பான வகையில் அங்குள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் சிறுவர்களின் புகைப்படங்களை சமுக வளையத்தளத்தில் பதிவிட்டு அந்த மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் மன உளைச்சல் ஏற்படும் விதத்தில் செயல்பட்டதாக கிரண்பேடி மீது அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


இதுகுறித்து அவ்வமைப்பின் நிறுவனர் சீ.சு.சுவாமிநாதன் தலைமையில், பொதுச்செயலாளர் முருகன், அதனுடன் இந்திய தேசிய இளைஞர் முன்னணி(INYF) தலைவர் கலைப்பிரியன் பொதுச்செயலாளர் தாமரை கண்ணன், நகர தலித் பாதுகாப்பு இயக்க தலைவர் பிரகாஷ்,மற்றும் செல்வகுமார், புதுச்சேரி மக்கள் நலவாழ்வு நற்பணி இயக்க தலைவர் ராஜா அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

ADVERTISEMENT


கடந்த மாதம் 06.11.2019 அன்று மாணவர் கூட்டமைப்பிற்கு புகார் கடிதம் ஒன்று வந்தது. அந்த புகார் கடிதம் பெயர் ஆதாரம் எதுவும் குறிப்பிடாமல் தனது மகன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் படிப்பதாகவும், அந்த தகவல் தன் குடும்பத்தினர் யாருக்கும் தெரியாதெனவும் குடும்பச் சூழ்நிலை காரணமாக மூன்று வேலை உணவோடு தனது மகன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நல்ல கல்வி அடைவதை விரும்பி தன் மகனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் படிக்க வைத்து வருவதாகவும் எழுதப்பட்டிருந்தது.

இந்த பள்ளியை ஆய்வு என்ற பெயரில் சென்ற ஆளுநர் கிரண்பேடி அந்தப் பள்ளியில் இருக்கும் மாணவர்களோடு புகைப்படம் எடுத்து அதனை கிரண்பேடி என்ற தனி நபர் ட்விட்டர் போன்ற இணைய தளங்களில் பதிவிட்டதனால் தன் மகன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தங்கி படிப்பது தனது வாழும் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் மற்றவர்களுக்கும் தெரிந்ததாக புகார் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.


இந்த குற்றச்சாட்டுகள் உண்மையானைவையா? என்பதை ஆராய ஆளுநர் கிரண்பேடி ட்விட்டர் பக்கத்தினுள் சென்று பார்த்தபோது ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கண்ட போது சிறுவர்களோடு எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் 21 / 22.01.2018 தேதியில் பதிவிட்டுள்ளார். மேலும் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஆய்வு என்ற பெயரில் ஆளுநர் கிரண்பேடி தனக்கு பாதுகாவலர்களாக உள்ள பாதுகாப்பு அதிகாரிகளை சீருடையோடு சீர்திருத்த பள்ளி வளாகத்திற்குள் அழைத்து சென்றுள்ளார். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் பயிலும் மாணவர்களை இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி எவ்வாறு கையாள வேண்டும் என்ற பல்வேறு விதிமுறைகள் இருப்பதை அனைவரும் அறிவார்கள்.

ஆளுநர் கிரண்பேடி காவல்துறையின் உயரிய பொறுப்பில் பதவி வகித்தவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருந்தும் கூட சிறுவர் சீர்திருத்த பள்ளி மாணவர்களோடு எடுத்த புகைப்படங்களை பொது தளத்தில் வெளியிட்டது மட்டுமல்லாமல் நாளிதழ் செய்தி ஊடகங்களுக்கும் அளித்துள்ளார். மேலும், இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளின் படி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் பயிலும் மாணவர்களை புகைப்படம் எடுக்கவோ, அந்த புகைப்படத்தை வெளியிடவோ அல்லது Juvenile அவர்களின் அடையாங்களை வெளியிட The Juvenile Justice (care and protection of Children) Act, 2015-யின்படி தடை உள்ளது. அவ்வாறு தடையை மீறி வெளியிட்டால் அது தண்டணைக்குறிய குற்றமாகும் என்று சட்டத்தில் உள்ளது. மேலும் ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு அலுவல் மூலமாக பெற்ற தகவல்களை, அவரின் தனிப்பட்ட சமூக ஊடகத்தில் பொது மக்கள் பார்வைக்கு வெளியிட்டது அரசின் தகவல்களை விதிமுறைகளுக்கு எதிராக அத்து மீறியதாகும். இருந்தபோதும் ஆளுநர் கிரண்பேடி, சம்பந்தப்பட்ட துறையிடம் உரிய அனுமதி ஏதேனும் பெறப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய கடந்த 08.11.2019 அன்று தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் அவ்வாறு புகைப்படம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டதா என தகவலை அறிந்தபோது கடந்த 5 ஆண்டுகளில் அவ்வாறு அனுமதி கோரி சமூக நலத்துறையில் எவரும் விண்ணப்பிக்க வில்லை என்ற தகவலை தந்துள்ளனர்.

சமீபத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் அரசு அதிகாரத்தில் உள்ள நபர்கள் பொதுதளத்தில் இதுபோன்ற தகவல்களை தெரிவிக்க கூடாது என நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் அவ்வாறு அரசு ஆவணங்களை பொது தளத்தில் பதிவிட்டதற்கு எதிராக பெரியக்கடை காவல்நிலையத்தில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மீது புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வழக்கு கொடுக்கப்பட்டது,

ஆனால் எந்த ஒரு விசாரணையும் நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில். ஒரு பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தையின் தாய் தனது குடும்பம் பாதிக்கப்பட்டதை கடிதமாக எழுதியுள்ளது வேதனையளிப்பதோடு, மேலும் இதனால் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நற்சான்றிதழ் தொடர்பான எதிர்காலமும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே ஆளுநர் கிரண்பேடி மீது வழக்கு பதிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.


இதேபோல் கடந்த 15/12/2019 அன்று கார்நாடக மாநிலம்,கல்லட்கா நகரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்படும் ஸ்ரீ ராம் வித்ய கேந்திர பள்ளியில் நடைபெற ஆண்டு விழாவில்1992-ஆம் ஆண்டு சட்ட விரோதமாக இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் நிகழ்வை 4000 மாணவர்கள் மத்தியில் மீள்உ௫வாக்கம் செய்து காட்டப்ப்படுள்ளது என்றும், அந்த நிகழ்வில் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கலந்துகொண்டு அந்நிகழ்வை ஊக்குவித்து மாணவர்களின் இடையே மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் விதத்தில் செயல்பட்டதால் கிரண்பேடி மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க கோரி மனித நேய மக்கள் கட்சி சார்பில் பெரிய கடை காவல் நிலையத்திலும், இந்திய தேசிய இளைஞர் முன்னணி சார்பில் கோரிமேடு காவல் நிலையத்திலும் புகார்கள் கொடுக்கபட்டுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புதுச்சேரி மாநிலத்திற்கு அவமானத்தையும், நாட்டின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல்களில் கவர்னர் ஈடுபடுவதை கண்டிக்க வேண்டும். மத்திய அரசு கிரண்பேடியை உடனே பதவியில் இருந்து நீக்க வேண்டும். புதுவை அரசும் கவர்னர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT