Skip to main content

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பா.ஜ.க டேக்; திரிணாமுல் காங்கிரஸ் அளித்த பரபரப்பு புகார்!

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
complaint given by Trinamool Congress for BJP tag on voting machines

மக்களவைத் தேர்தல் ஒவ்வொரு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டங்களாக 428 தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்று (25-05-24) 7 மணியளவில் ஆறாம் கட்டமாக 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதன்படி, பீகார் மாநிலத்தில் 8 தொகுதிகளுக்கும், ஹரியானா(10), ஒடிசா (6), மேற்கு வங்கம் (8), ஜார்க்கண்ட் (4), உத்தரப்பிரதேசம் (16) இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும், டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பா.ஜ.க என டேக் ஒட்டப்பட்டிருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘இ.வி.எம் பேக்குகளை சேதப்படுத்துவதன் மூலம் வாக்குகளை பா.ஜ.க பறிக்க முயற்சிக்கிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் பலமுறை கொடிபிடித்தது. இன்று, பாங்குரா மாவட்டம் ரகுநாத்பூரில், 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பா.ஜ.க எனக் குறிச்சொற்கள் இருப்பது கண்டறியப்பட்டது. தேர்தல் ஆணையம் உடனடியாக அதைப் பரிசீலித்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தது. 

திரிணாமுல் காங்கிரஸ் அளித்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளதாவது, ‘பணியமர்த்தும்போது, பொதுவான முகவரிக் குறிச்சொற்கள் விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களின் முகவர்களால் கையொப்பமிடப்பட்டன. அந்த நேரத்தில் பா.ஜ.க வேட்பாளரின் பிரதிநிதி மட்டுமே கமிஷன் ஹாலில் இருந்ததால், அந்த EVM மற்றும் VVPAT இயக்கும் போது அவரது கையெழுத்து எடுக்கப்பட்டது. இருப்பினும், PS எண் 56,58, 60, 61,62 இல் உள்ள அனைத்து முகவர்களின் கையொப்பம் வாக்கெடுப்பின் போது பெறப்பட்டது. ஆணையிடும் போது அனைத்து விதிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டன, முழுவதுமாக சி.சி.டி.வி கவரேஜ் கீழ் செய்யப்பட்டு முறையாக வீடியோ எடுக்கப்பட்டது’ எனத் தெரிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்