Skip to main content

பெட்ரோல், டீசல் விலை குறைகிறது; பின்னணி என்ன?

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

Companies decide to reduce the price of petrol and diesel

 

இந்தியா 85% அளவிலான எரிபொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாற்றம் வெகு விரைவாக இந்தியாவில் எதிரொலிக்கும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை தற்போது குறைந்து காணப்படுவதால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இந்தியாவிலும் குறையலாம் என கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல்கள் வெளியானது. 

 

ஆனால் சில மாதங்கள் முன் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. முரளிதரன் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ள போதும் பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாதது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங், “2014 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது குறைந்த அளவில்தான் உள்ளது. 1974 ஐ ஒப்பிடும்போது கடைசி எட்டு ஆண்டுகளில் விலையேற்றம் என்பது மிகக் குறைவுதான். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியாது. இந்தியாவில் தான் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கிறது” எனத் திட்டவட்டமாகக் கூறியிருந்தார். நடைமுறையில் பாஜக பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்தை அரசியலுக்காக பயன்படுத்துகிறது என குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியாவில் எப்போதெல்லாம் மாநிலத் தேர்தல்கள் வருகின்றனவோ, அப்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலை சிறிது நாட்களுக்கோ சில மாதங்களுக்கோ மாற்றமில்லாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

 

குஜராத், இமாச்சலப்பிரதேச தேர்தலுக்கு முன்பாகவும் ஆறு மாத காலத்துக்கு விலை மாற்றமில்லாமல் பார்த்துக் கொண்டார்கள். சில மாநிலங்களில் பாஜகவிற்கு வெற்றி கிடைத்தாலும் சில மாநிலங்களில் இந்த யுக்தி பலிக்கவில்லை. சமீபத்தில் நடந்த கர்நாடகத் தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. பாஜகவின் இலக்கு 2024 நாடாளுமன்றத் தேர்தல் தான். அதற்குள் அனைத்து மாநிலங்களிலும் இன்னும் வலுவாக காலூன்ற வேண்டும் என்றே அந்த கட்சி முயற்சிக்கும். தென் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத நிலையில் அக்கட்சியின் கவனம் வடமாநிலத்தில் அதிகம் குவிந்திருக்கும். ஆனால் இந்த ஆண்டு இறுதியில் 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் வர இருக்கிறது. பாஜக, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அக்கட்சி இன்னும் வலுவாக மாறும். இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

 

இழப்பில் இருந்து மீண்டு விட்டதால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்த போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. கச்சா எண்ணெய் விலையில் சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனிடையே 5 மாநிலத் தேர்தல், அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்தையும் கருத்தில் கொண்டே தற்போது பாஜக இம்முடிவை எடுத்துள்ளதாகவும் தேர்தல் முடிந்து இதே விலை தொடர வாய்ப்புகள் குறைவு என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்