
எலுமிச்சை பழத்தால் ஏற்பட்ட தகராறில் ராஜஸ்தானின் வகுப்புவாத பதற்றம் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரின் சூரஜ்போல் பகுதியில் வசிப்பவர் சத்யவீர். காய்கறி விற்பனையாளரான இவர், தீஜ் கா சௌக்கில் உள்ள மகேஸ்வரி தர்மசாலா அருகே கடை நடத்தி வந்துள்ளார். இவரது கடைக்கு நேற்று முன் தினம் (15-05-25) சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். அப்போது, எலுமிச்சை விலை தொடர்பாக அந்த இளைஞர்கள், சத்யவீருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திலேயே அவர்களுக்குள் கைகலப்பானது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், அந்த பிரச்சனையைத் தீர்த்து வைத்துள்ளனர். இளைஞர்களில் ஒருவர், சத்யவீரின் கடையில் கல்லை எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து சத்யவீர் புகார் அளிக்க தன்மண்டி காவல் நிலையத்தை அணுகி பின்னர் தனது கடைக்குத் திரும்பினார். அதன் பிறகு இரவு 10 மணியளவில் இளைஞர்கள் கொண்ட குழு, வாள் மற்றும் தடிகளுடன் அந்த கடைக்கு வந்துள்ளனர். அங்கு வந்த அவர்கள், சத்யவீரையும் அவரது தந்தையையும் வாள்கள் மற்றும் பிற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சத்யவீர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் கோபமடைந்த உள்ளூர்வாசிகளும் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்களும் சம்பவ இடத்தில் கூடத் தொடங்கினர். சிலர், கோயிலுக்கு அருகிலுள்ள தகரக் கொட்டகைகள் மற்றும் விற்பனையாளர் கடைகளுக்கு தீ வைத்தனர், இது நிலைமையை மேலும் மோசமாக்கியது. தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி, தன் மண்டி, நேரு பஜார், நடா காடா, டெல்லி கேட் கிராசிங் மற்றும் பாபு பஜார் உள்ளிட்ட முக்கிய சந்தைகளை காய்கறி வியாபாரிகள் மூடினர். இதனால் அப்பகுதியில் வகுப்புவாத பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
காய்கறி விற்பனையாளரை தாக்குதல் நடத்திய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு, நகரம் முழுவதும் தீவிர ரோந்து மற்றும் சோதனைகள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரிக்க போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.