/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/operationsindoorr.jpg)
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா கடந்த மே 7ஆம் தேதி நள்ளிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது. மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக கடந்த 10ஆம் தேதி இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது. அதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது.
இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகவும், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தஞ்சம் அளிப்பது, நிதி உதவி வழங்குவது உள்ளிட்ட தகவல்கள் குறித்தும் உலக நாடுகளுக்கு ஆதாரங்களுடன் விளக்கமளிக்க அனைத்துக் கட்சி எம்.பிக்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, எம்.பிக்கள் அடங்கிய குழுக்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தலைவர்களைச் சந்தித்து விளக்கமளித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவனந்தபுரம் எம்.பியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் தலைமையிலான குழு கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் தற்போது காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையிலான குழு கொலம்பியாவுக்குச் சென்று அங்குள்ள தலைவர்களைச் சந்தித்து பாகிஸ்தான் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர். அப்போது, ஆபரேஷன் சிந்தூரால் பாகிஸ்தான் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு கொலம்பியா இரங்கல் தெரிவித்திருந்ததற்கு காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/shashicolombia.jpg)
அதில் அவர் கூறியதாவது, “கொலம்பிய அரசாங்கத்தின் செயல்பாடுகளால் நாங்கள் கொஞ்சம் ஏமாற்றமடைந்தோம். ஏனென்றால், அவர்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் காட்டுவதற்குப் பதிலாக, இந்தியத் தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் இறப்பதையும், அப்பாவி பொது மக்கள் இறப்பதையும் ஒரே பார்வையில் பார்ப்பது சரியானது அல்ல” என்று கூறியிருந்தார்.
சசி தரூரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட கொலம்பியா, பாகிஸ்தானில் இறந்தவர்களுக்கு தெரிவித்த இரங்கலை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது. கொலம்பியாவின் திருத்தப்பட்ட நிலைப்பாட்டைப் பாராட்டிய சசி தரூர் தெரிவித்துள்ளதாவது, “நாங்கள் கவலை தெரிவித்த அறிக்கையை அவர்கள் திரும்பப் பெற்றுள்ளதாகவும், இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாட்டை அவர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளதாகவும் துணை அமைச்சர் மிகவும் கனிவுடன் குறிப்பிட்டார். இது நாங்கள் மிகவும் மதிக்கும் ஒன்று” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)