CM Yogi Adityanath explained about Congestion at Kumbh Mela

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா கடந்த 13ஆம் தேதி முதல் தொடங்கியது. பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வு அடுத்த மாதம் 26ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த கும்பமேளாவில், இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள், கங்கை, யமுனை, மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதுவரை 10 கோடிக்கும் மேலான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் தான் கும்பமேளாவில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (29.01.2025) தை அமாவாசை (Mauni Amavasya - மௌனி அமாவாசை) என்பதால் அதிகாலை முதலே லட்சக்கணக்கானோர் திரண்டதால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் மகா கும்பமேளாவில் புனித நீராடத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டது. தற்போது இந்த தடை நீக்கப்பட்டு பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்று இதுவரை 3.61 கோடி மக்கள் திரிவேணி நீரில் புனித நீராடியுள்ளனர். நேற்று (28.01.2025) வரை மொத்தம் 19.94 கோடி மக்கள் புனித நீராடியுள்ளனர் என உத்தரப்பிரதேச மாநில தகவல் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த சம்பவம் குறித்து பேசுகையில், “இன்று மௌனி அமாவாசை. இதன் காரணமாக மகா கும்பமேளாவில் சுமார் 8 இதிலிருந்து கோடி பக்தர்கள் பிரயாக்ராஜில் உள்ளனர். நேற்று 5.5 கோடி பேர் புனித நீராடினர். சில பக்தர்கள் தடையைக் கடக்க முயன்றனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

Advertisment

மௌனி அமாவாசை துவங்கியதும் கூட்டம் வர ஆரம்பித்தது. பிரதமர் மோடி காலை முதல் நிலைமையைக் கண்காணித்து வருகிறார். இதுவரை நான்கு முறை தொலைப்பேசியில் என்னைத் தொடர்பு கொண்டு அழைத்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா, ஆளுநர் ஆனந்திப்பென் படேல் ஆகியோர் தொடர்ந்து தகவல்களைக் கேட்டு வருகின்றனர். தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் கூட்டம் நடக்கிறது. தற்போது, ​​பிரயாக்ராஜில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. ஆனால் கூட்டத்தின் வருகை அழுத்தம் அப்படியே உள்ளது” எனத் தெரிவித்தார்.