CM Siddaramaiah says It is not right to play politics on this issue 

Advertisment

ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணியின் வெற்றி பேரணியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இன்று (04.06.2025) காலை முதலே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் திரண்டனர். மைதானத்தின் வாசல் அருகே ஏராளமானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில், ஆண்கள், பெண்கள், சிறுமி என 11 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா செய்தியாளர் சந்தித்து விளக்கமளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், “ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று இரவு வரை நடைபெற்றது. கிரிக்கெட் சங்கம் சின்னசாமி மைதானத்தில் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. விதான சவுதா அருகே அரசு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக கூடிய மக்கள் மற்றும் ரசிகர்களின் எண்ணிக்கை எங்கள் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக இருந்தது. விதான சவுதா முன் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடியிருந்தனர். இருப்பினும், அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் எதிர்பாராத சம்பவங்கள் அல்லது துயரங்கள் எதுவும் நடக்கவில்லை.

ஆனால் சின்னசாமி மைதானத்தில் அந்த சோகம் நடந்தது. இதை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. கிரிக்கெட் சங்கமோ நாங்களோ இதை எதிர்பார்க்கவில்லை. கிரிக்கெட் மைதானத்தில் 35 ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் வசதி உள்ளது. ஆனால் 2 முதல் 3 லட்சம் பேர் வரை வந்திருக்கிறார்கள். இவ்வளவு பேர் வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கிரிக்கெட் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளுக்கு மட்டுமே அரசாங்கம் பாதுகாப்பு அளிக்கிறது. காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். இந்த விஷயத்தில் அரசியல் செய்வது சரியல்ல.

Advertisment

இந்த துயர சம்பவம் நடந்திருக்கக்கூடாது. இருப்பினும் அது நடந்தேறிவிட்டது. இதற்காக அரசு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். அவர்களின் குடும்பத்தினருக்கும், பெற்றோருக்கும் அவர்களின் மரணத்தின் துயரத்தைத் தாங்கும் வலிமை கிடைக்க பிரார்த்திக்கிறேன். சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஒரு பெரிய சோகம் நிகழ்ந்தது. இங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 47 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களின் உடல்நலம் குறித்து விசாரிக்கவும், அவர்களுக்கு உறுதியளிக்கவும், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறவும் நான் பவுரிங் மருத்துவமனை மற்றும் வைதேஹி மருத்துவமனைக்குச் சென்றேன்.

CM Siddaramaiah says It is not right to play politics on this issue 

கொண்டாட்டங்களின் போது இதுபோன்ற ஒரு சோகம் நடந்திருக்கக்கூடாது. இந்த சம்பவத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். இறந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்குவோம். காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவுகளை அரசு ஏற்கும். காயமடைந்தவர்களுக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த துயர சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.