
திட்ட ஆணையத்திற்கு மாற்றாக நிதி ஆயோக் எனும் அமைப்பு கடந்த 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குதல், திட்டங்களை வடிவமைத்தல் போன்ற முக்கிய பணிகளைச் செய்து வருகிறது. இந்த அமைப்பின் தலைவராகப் பிரதமர் நரேந்திர மோடி (ex officio chairman) செயல்படுகிறார். அனைத்து மாநிலங்கள் மற்றும் சட்டமன்றங்களுடன் கூடிய யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களைக் கொண்ட நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு குழு அமைக்கப்பட்டது.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆட்சி மன்ற குழுவின் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ‘2047இல் வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற தலைப்பில், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், மரபு சாரா எரிசக்தி உருவாக்கம் போன்றவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் நாளை (24.05.2025) காலை 9 மணிக்குக் கூட்டம் தொடங்கி மாலை வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் தங்களது மாநிலங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
அந்த வகையில் இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம், திட்ட செயலாக்கத்துறை செயலாளர் ரமேசந்த் மீனா, முதலமைச்சரின் தனி செயலாளர்கள் உமாநாத் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசு சார்பில் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதி குறித்து அவர் வலியுறுத்திப் பேச உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இன்று (23.05.2025) காலை 10 மணியளவில் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். முன்னதாக விமான நிலையம் வந்திருந்த அவரை அமைச்சர்கள் மற்றும் மேயர் உள்ளிட்டோர் வழி அனுப்பி வைத்தனர். முன்னதாக தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்களான கே.என். நேரு, எ.வ. வேலு, தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே. விஜயன் உள்ளிட்டோர் முதலமைச்சரை டெல்லியில் வரவேற்பதற்காக நேற்று (22.05.2025) இரவே அங்குச் சென்று விட்டனர்.

அதே சமயம் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு நடந்த 2022, 2023 மற்றும்20024 ஆகிய 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மேலும் இந்த பயணத்தின் ஒரு பகுதியாகப் பிரதமர் மோடியை நேரில் சந்திப்பதற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரம் கேட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.