
டெல்லி சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தின் பழைய கட்டடங்களை முழுவதுமாக இடித்து மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு (26.07.2024) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக, வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து 257 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அங்குக் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்புதிய கட்டடம் மிக முக்கிய பிரமுகர் தொகுதி, விருந்தினர் மாளிகை தொகுதி மற்றும் அலுவலர்கள் குடியிருப்புத் தொகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய, 3 அடித்தளங்கள், தரைதளம் மற்றும் 7 மேல் தளங்களைக் கொண்டதாகவும். மொத்தம் 3 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் தான் இன்று (24.05.2025) நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23.5.2025) டெல்லி சென்றடைந்தார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாகத் தமிழ்நாடு அரசின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் விருந்தினர் இல்லம் மற்றும் அலுவலர் குடியிருப்பு கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த கட்டுமான பணிகள் ஆய்வு மேற்கொண்ட பின்னர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி பரமேஸ்வரனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.
இந்த நிகழ்வுகளின்போது பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, திருச்சி சிவா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் சோனியா காந்தியையும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியையும் அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.