Skip to main content

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு...மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்கள் கைது...!

Published on 14/12/2019 | Edited on 14/12/2019

குடியுரிமை திருத்த சட்டம் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசு மற்றும் உள்துறை அமைச்சரை கண்டித்து நாடு முழுவதும் எதிர் கட்சியினர் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Citizenship Law Amendment Bill issue

 



இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி காமராஜர் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்  விடுதலை சிறுத்தைகள், தமிழர் வாழ்வுரிமை கட்சி  உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

அப்போது திடீரென தாங்கள் கொண்டு வந்த சட்டத் திருத்த மசோதா நகலை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் உருவபொம்மையை எரிக்க முயன்ற போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட  நூற்றுக்கும்  மேற்பட்டோரை  போலீசார் கைது செய்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“தீவிரமான மக்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Tamilisai Selandararajan's explanation of his resignation

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்தார். புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, ஆளுநர் மாளிகையில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “3 ஆண்டுகள் எப்படி ஓடியது என்பது ஆச்சரியமாக உள்ளது. ஆளுநர் பதவியில் அதிகமாக முதல்வர்களை பார்த்ததில் பெருமை கொள்கிறேன். 4 முதல்வர்களை எனது பதவியின் போது பார்த்து பயணித்துள்ளேன். வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வந்தால், நான் பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் இணைந்து 25 ஆண்டுகள் ஆகிறது. மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அது ஆண்டவனும், ஆள்பவனும் தான் முடிவு செய்வார்கள். புதுச்சேரியை வேறு மாநிலம் என்று எப்போதும் பார்த்ததில்லை. தன்னை வேறு மாநிலத்தவர் என்று யாரும் பார்க்க வேண்டாம்” என்று கூறியிருந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழிசை செளந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், வரவிருக்கிற மக்களவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி சார்பாக பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதேபோல், தமிழகத்திலும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 39 தொகுதிகளிலும் களம் காண்கிறது. இந்த தேர்தலில், புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க. சார்பாக தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடப் போவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் தூத்துக்குடி அல்லது புதுச்சேரியில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடப் போவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காகத் தான் மனமுவந்து ராஜினாமா செய்திருக்கிறேன். தெலங்கானா, புதுச்சேரி மக்கள் என் மீது காட்டிய அன்பிற்கும் நான் நன்றியுடையவளாக இருப்பேன். மக்களுக்கு நேரடியாக பணியாற்ற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். நான் மக்கள் ஆளுநராக தான் இருந்தேன். என்னுடைய ராஜினாமா ஏற்றுக்கொண்ட பிறகு என்னுடைய எதிர்கால திட்டத்தை பற்றிச் சொல்கிறேன்” எனத் தெரிவித்தார். முன்னதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “மக்கள் சேவைக்காக மீண்டும் வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தெலுங்கானா மக்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி. நான் எப்போதும் தெலுங்கானாவின் சகோதரி. அவர்களின் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி” எனத் தெரிவித்திருந்தார்.

Next Story

“மத்திய அரசு சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்தியதன் நோக்கம் இதுதான்” - திருமாவளவன்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Thirumavalavan announced the protest for CAA Act

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சி.ஏ.ஏ சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதனையொட்டி, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், “இந்த சட்டத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். அந்த எதிர்ப்பை எதிர்கொள்ள இயலாத காரணத்தில் கடந்த 3 ஆண்டுகளாக் அச்சட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்போது அதை அமல்படுத்திருக்கிறார்கள். இதன் மூலம் பெரும்பான்மைவாத அரசியலை முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வரும் மார்ச் 15ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் சென்றதேயில்லை. மணிப்பூரில் நாள்தோறும் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அங்கு சென்று பார்க்கவேயில்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் ஒரே மாநிலத்தில் திரும்ப திரும்ப வருகிற நிலையை நாம் பார்க்கிறோம். அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் நலனை விட தங்கள் அரசியல் ஆதாயம் தான் முக்கியம் என்று கருதக்கூடியவர்கள். அதனால், இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பது அவசியம். சனாதன சக்திக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார்.