Skip to main content

"உயிருடன் இருந்தபோது பார்க்கவில்லை, இப்போது அரசியல் செய்கிறார்கள்" - சிராக் பஸ்வான் சாடல்...

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

Chirag Paswan on HAM's letter to PM demanding a probe into his father's demise

 

ராம்விலாஸ் பஸ்வான் நோயுற்றிருந்தபோது அவரை நேரில் வந்து பார்க்காதவர்கள் தற்போது அவர் இறந்த பிறகு இறப்பை வைத்து அரசியல் செய்கின்றனர் என சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். 

 

மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த மாதம் காலமானார். டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் ராம்விலாஸ் பஸ்வான் சிகிச்சை பலனின்றி காலமானார். பீகார் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இவரின் இறப்பு அங்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ராம்விலாஸ் பஸ்வான் இறப்பில் அவரது மகன் சிராக் பஸ்வான் மீது சந்தேகம் எழுந்துள்ளதால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி தலைவர் ஜிதேன் ராம் மன்ஜி, பிரதமருக்குக் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.  "ராம்விலாஸ் பஸ்வான் மரணத்தில் அவரது மகன் சிராக் பாஸ்வானை கேள்விக்குள்ளாக்கும் பல சந்தேகங்கள் உள்ளன. எனவே இதுகுறித்து தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும்" என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள சிராக் பஸ்வான், "ஒரு மகனைப் பற்றி இதுபோன்ற விஷயங்களைப் பேசுபவர்கள் தங்களைப் பற்றி வெட்கப்பட வேண்டும். தொலைபேசியில் என் தந்தையின் உடல்நிலை குறித்து மன்ஜி அவர்களிடம் சொல்லியிருக்கிறேன், ஆனாலும் அவர் ஒருபோதும் என் நோயுற்ற தந்தையைப் பார்க்க வரவில்லை. மன்ஜி இப்போது என் தந்தையைப் பற்றி அக்கறையாக இருப்பதுபோல பேசுகிறார். ஆனால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது ஏன் அவரைப் பற்றி இவ்வளவு அக்கறை காட்டவில்லை? எல்லோரும் இப்போது இறந்த என் தந்தையை வைத்து அரசியல் விளையாட்டு விளையாடுகிறார்கள், அவர் உயிருடன் இருந்தபோது அவரைப் பற்றி யாரும் ஏன் கவலைப்படவில்லை?" என கேள்வியெழுப்பியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்