ADVERTISEMENT

தவாங் பகுதியில் சீனா ஊடுருவல்; முறியடித்த இந்திய ராணுவம்; மக்களவையில் ராஜ்நாத்சிங் தகவல்

09:01 PM Dec 13, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சீன ராணுவம் இந்திய எல்லைப் பகுதிகளில் அவ்வப்போது ஊடுருவல் நடத்துவதும், இரு நாடுகளின் நல்லுறவைச் சிதைக்கும் வகையில் கட்டுமானங்களை உருவாக்குவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் ஒன்பதாம் தேதி, இந்திய ராணுவத்துக்கும் ஊடுருவல் நடத்த முயன்ற சீன ராணுவத்துக்குமிடையே சண்டை நடைபெற்றது குறித்தும் இருதரப்பிலும் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டது குறித்தும் அதிர்ச்சித் தகவல் வெளியானது.

இதுகுறித்து இன்று மக்களவையில் விளக்கமளித்த இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங்கில் சீன துருப்புக்கள் ஊடுருவல் நடத்தியதாகவும் தற்போதைய நிலையை அவர்களுக்குச் சாதகமாக மாற்ற முயன்றதாகவும் இந்திய ராணுவத்தினர் அவர்களோடு சண்டையிட்டு விரட்டியடித்ததாகவும் குறிப்பிட்டார்.

டிசம்பர் 9 அன்று, அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்சே எனப்படும் சர்ச்சைக்குரிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (எல்.ஏ.சி) சீன ராணுவத்தினர் ஊடுருவல் நடத்தியதாகவும், இந்திய ராணுவத்தினர் சீனாவின் ஊடுருவல் முயற்சியை உறுதியுடன் எதிர்த்ததாகவும் கூறினார். இந்த மோதலில் இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் நமது ராணுவத்தினர் மிகுந்த துணிச்சலுடன் சீன ராணுவ ஊடுருவலைத் தடுத்து நிறுத்தி அவர்களைத் தங்கள் நிலைக்குப் பின்வாங்கும்படி செய்தது என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.

ராணுவ அமைச்சரால் கைகலப்பு என்று கூறப்படுவதில் இருதரப்பும் கட்டைகளாலும், பிரம்புகளாலும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாகவும் இதில் காயமடைந்த இந்திய வீரர்கள் கவுகாத்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இம்மோதலில் இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டதாகவும், உயிரிழப்பு ஏதுமில்லை என்றும் கூறப்படுகிறது. அதையடுத்து பதற்றத்தைக் குறைப்பதற்காக இருதரப்பு உள்ளூர் தளபதிகள் மட்டத்தில் டிசம்பர் 11ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அமைதியைப் பேணும்படி சீனத்தரப்பிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதற்கு முன்னர், 2020ஆம் ஆண்டில் லடாக் பகுதியில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு மிகப்பெரிய மோதலாக இது பார்க்கப்படுகிறது.

எல்.ஏ.சி.யை ஒட்டிய பகுதிகளில் அவரவர் எல்லைப்புறத்தில் இரு நாட்டு ராணுவத்தினரும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவது வழக்கம். தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்படுவதால் இந்திய ராணுவத்தினர் தங்கள் நிலைகளிலிருந்து சற்று உள்வாங்கியிருப்பார்கள். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சீன ராணுவத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர்கள், இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். இதனைத் தெரிந்துகொண்ட இந்திய ராணுவத்தின் தரப்பில் 80 வீரர்கள் வரை, இரவோடு இரவாக இணைந்து அப்பகுதிக்குச் சென்று சீன ராணுவத்தினரின் ஊடுருவலை எதிர்த்து சில மணி நேரமாக மோதியுள்ளனர்.

இதில் இருதரப்பிலும் காயங்கள் ஏற்பட்ட நிலையில், இந்திய ராணுவம் உஷாராகிவிட்டதை அறிந்து ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினர் பின்வாங்கி தங்கள் இருப்பிடத்துக்கே சென்றுள்ளனர். ஏற்கெனவே கல்வான் பகுதியில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலால் இந்தியத் தரப்பில் 20 வீரர்கள் கொல்லப்பட்ட துயரம் நடந்தது. தற்போது அத்தகைய அசம்பாவிதம் நிகழாமல் தடுக்கப்பட்டதோடு சீன ராணுவத்தினரும் பின்வாங்கியுள்ளனர். தவாங் சம்பவத்துக்குப் பிறகு அப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் உஷார் நிலையில் உள்ளனர்.

- தெ.சு. கவுதமன்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT