Chief Minister Shivraj Singh Chouhan meets Dashmat Rawat and washes his feet

மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் பழங்குடியின தொழிலாளி மீது பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்த வீடியோ சமுக வலைதளங்களில் பரவியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பாஜக நிர்வாகியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.

Advertisment

அந்த வகையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி புல்டோசர் மூலம் பிரவேஷ் சுக்லா வீட்டை இடித்து தள்ள நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா மீது தேசிய பாதுகாப்பு சட்டம், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

Advertisment

இதனிடையே பிரவேஷ் சுக்லா அரசு நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வீட்டை கட்டியிருந்தது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சித்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரவேஷ் சுக்லா வீடு புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பிரவேஷ் சுக்லாவுக்கு மத்தியப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ. கேதார்நாத் சுக்லா மற்றும் பல பாஜக நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மத்தியப்பிரதேச முதல்வர் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பாதிக்கப்பட்ட பழங்குடியின தொழிலாளி தஷ்மத் ராவத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காகதனது வீட்டிற்கு அழைத்துள்ளார். பிறகு அவரை இருக்கையில் அமர வைத்து அவரது பாதங்களைகழுவ முற்பட்டார். இதனால் அதிர்ந்த தஷ்மத் ராவத், வேண்டாம் என்றார். அதற்கு சிவராஜ் சிங் பரவாயில்லை எனக் கூறி தஷ்மத் ராவத்தின் பாதங்களைக்கழுவினார். பிறகு அவருக்கு மாலைமற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். விநாயகர் சிலை ஒன்றும் அவருக்கு பரிசளிக்கப்பட்டது.

பிறகு அவருடன் அமர்ந்து பேசிய சிவராஜ் சிங், அவருக்கு சிற்றுண்டியை ஊட்டிவிட்டு அவரிடம் சில நிமிடங்கள் உரையாடினார். அப்போது அவரிடம், “அந்த வீடியோவை பார்த்து எனக்கு மிகவும் மனவேதனை ஏற்பட்டது. அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மக்கள்எல்லாம் எனக்கு கடவுள்போன்றவர்கள்” என்று தெரிவித்தார். இறுதியாக அவரது முதுகில் தட்டிக்கொடுத்து அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.