
10வது ஆண்டாக இந்த ஆண்டு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (24.05.2025) இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் ‘2047இல் வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற தலைப்பில், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், மரபுசாரா எரிசக்தி உருவாக்கம் போன்றவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் தங்களது மாநிலங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க உள்ளனர்.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து அவர் வலியுறுத்தி பேசியிருந்தார். இக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் பிரதமர் மோடியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரோடு கேஷுவலாக தேநீர் அருந்தியபடி மோடி இருவரிடமும் பேசினார். இது தொடர்பான காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது.