chidambaram about article 370 issue

Advertisment

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நடந்துள்ள மனித உரிமை மீறலை உலகம் கவனித்து வருகிறது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கி ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், "இன்று ஆகஸ்ட் 6-ஆம் தேதி. அனைத்து அரசியல் கட்சிகளும், சரியாகச் சிந்திக்கக்கூடிய குடிமக்கள் அனைவரும், கடந்த ஓர் ஆண்டாகச் சிறையில் இருப்பதைப் போன்று வாழ்ந்துவரும் 75 லட்சம் காஷ்மீர் மக்களைப் பற்றி யோசித்துப்பாருங்கள்.

ஜனநாயக ரீதியில் செயல்படும் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த பரூக் அப்துல்லா, தன்னுடைய கூட்டம் குறித்து முன்பே அறிவித்தும் அவருக்கு அனுமதியளிக்கப்படவில்லை. இதுவா பா.ஜ.க.வால் காட்சிப்படுத்தப்படும் புதிய ஜனநாயகம்? அனைத்துத் தலைவர்களும் வீட்டுச் சிறையில் இருக்கிறார்கள். நீங்கள் கேள்வி எழுப்பினால், நீதிமன்றத்தில் சென்று யாரும் வீட்டுக்காவலில் இல்லை என்று கூறுவார்கள். வீட்டுக் காவல் என்பது சட்டவிரோத கருவி. கிரிமினல் சட்டத்தின் கீழ் அதற்கு எந்தச் சட்ட அங்கீகாரமும் இல்லை. இது அதிகார துஷ்பிரயோகம்

Advertisment

மெகபூபா முப்தியை விடுவிக்கவும், வீட்டுக்காவலில் உள்ளவர்கள் அரசியலமைப்புச் சட்டப்படி சுதந்திரமாக நடமாடவும் நாம் அனைவரும் நமது குரலை ஒன்றாக எழுப்ப வேண்டும். இந்தியாவில் அப்பட்டமாக மனித உரிமைகள் மறுக்கப்படுவதை உலகம் கவனித்துக்கொண்டிருக்கிறது. இந்தியா பெருமையாகக் கூறிக்கொள்ளும், சுதந்திரமான மற்றும் ஜனநாயக நாடு என்பது நாள்தோறும் குறைந்துகொண்டே வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.