Skip to main content

"இந்த முடிவு தாமதமானதுதான். இருந்தாலும்"... பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரத்தின் அறிவுறுத்தல்...

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் செய்யப்படும் சூழலில் விளிம்புநிலை மக்களுக்கு அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

 

chidambaram on 21 days lockdown

 

 

இந்தியாவில் 500க்கும் மேற்பட்டோர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 9 பேர் இதனால் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். ஏப்ரல் 15 வரையிலான அடுத்த 21 நாட்களுக்கு உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் எனவும்,  ஊரடங்கு காரணமாகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் நலனே முக்கியம் எனப் பிரதமர் மோடி அறிவித்தார். பிரதமர் மோடியின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ஊரடங்கு நேரத்தில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கவும் தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "பிரதமர் மோடியின் உரையை மிகவும் கவனமாகக் கேட்டேன். அவரின் பேச்சில் மக்கள் மீதான அக்கறை, உணர்ச்சி, அழுத்தம், கவலை, அச்சம் போன்ற அனைத்து உணர்வுகளும் கலந்திருந்தது. இந்த ஊரடங்கு தாமதமானதுதான். இருந்தாலும் அவசியமானது. அதேநேரம், அடுத்த 21 நாட்களுக்கு விளிம்பு நிலை மக்களுக்குத் தேவையான பொருளாதார உதவிகளை யார் வழங்கப் போகிறார்கள்? ஏழைகள், தினக்கூலிகள், வேளாண் தொழிலாளர்கள், சுயதொழில் செய்வோர் ஆகியோருக்கு நிதியுதவி அளிக்கும் திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்