Chhattisgarh Chief Minister's new notification to prevent crimes against women

Advertisment

ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமை முயற்சிகள் மற்றும் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அரசு வேலைகளில் இருந்து தடை விதிக்கப்படும் என்று சில வாரங்களுக்கு முன்பு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து சத்தீஸ்கரிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு அரசு வேலையில் இருந்து தடை விதிக்கப்படும் என சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் அறிவித்து இருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில், சிறுமிகள் மற்றும் பெண்களைத் துஷ்பிரயோகம் செய்யும் குற்றவாளிகளின் பதிவு போன்றவற்றை காவல் நிலையங்களில் பராமரிக்கப்பட்டு அரசு வேலைகளுக்குத்தேவையான நற்சான்றிதழிலும் இடம் பெறும். இதுபோன்ற வழக்குகளுடன் அவர்களோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ அரசு வேலைக்கு விண்ணப்பித்தால் அத்தகைய நபர்களின் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அத்தகைய குற்றவாளிகளுக்கு எதிராகச் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், நாட்டின் 77வது சுதந்திர தின விழா கோலாகலமாக நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் மாநில அளவிலான சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு, அம்மாநில மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத்தெரிவித்த பூபேஷ் பாகேல் 15 அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார்.

Advertisment

அந்த உரையில் அவர், “பெண்களின் பாதுகாப்பையும், அவர்களின் மரியாதையையும், அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பதே எங்கள் முதன்மையான முன்னுரிமை ஆகும். சிறுமிகள் மற்றும் பெண்களைத் துன்புறுத்தல், வன்கொடுமை மற்றும் பிற ( பெண்களுக்கு எதிரான குற்றங்கள்) குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசாங்க வேலைகளில் இருந்து தடை செய்யப்படுவார்கள் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.