டீசர், ட்ரைலர் வெளிவரும், அட்வான்ஸ் புக்கிங் நடக்கும், கதையின் உரிமை பல கோடிகளுக்கு உடனே வாங்கப்படும்... இதெல்லாம் நடப்பது ஒரு பெரிய நடிகரின் திரைப்படத்துக்கு அல்ல, இந்த எழுத்தாளரின் நாவல்களுக்குதான். சேத்தன் பகத், இந்தியாவில் வாசிப்பு குறைந்துவிட்டது என்று கூறப்பட்ட காலத்தில் கோடிகளில் இவர் எழுதிய புத்தகங்கள் விற்றன. கிட்டத்தட்ட அத்தனை புத்தகங்களும் திரைப்படங்களாகி வெற்றியும் பெற்றுவிட்டன. ஆனாலும், இவரை தரமான இலக்கியவாதி என்று ஏற்றுக்கொள்ளாதவர்கள் பலர் உண்டு. இவரது நாவல்கள் இளைஞர்களை சீரழிப்பதாக விமர்சிப்பவர்கள் உண்டு. படுக்கையறை காட்சிகளுக்காகத்தான் இவரது நாவல்கள் விற்கின்றன என்னும் அளவுக்கு சொல்பவர்கள் உண்டு. ஆனால், இவர் தன் பாதையில் மேலே சென்றுகொண்டே இருக்கிறார்.

chethan bagat

தான் சிறந்த இலக்கியவாதியல்ல என்று கூறும் சேத்தன், ஆனால் தன் புத்தகங்கள் சிறப்பாக விற்பதை தன்னை விமர்சிப்பவர்களும் ஒத்துக்கொள்ளத்தான்வேண்டும் என்கிறார். தான் பேச விரும்பும் மாற்றத்தை நோக்கி கவனம் ஈர்ப்பதற்காக ஆரம்பத்தில் காதல், கேளிக்கை கதைகள் எழுதினேன். ஆனால், அவற்றிலும் கூட அரசியலும் சமூக விஷயங்களும் இருக்கும் என்கிறார். இதுவரை சேத்தன் பகத்தின் நூல்களை ரூபா பப்ளிகேஷன் நிறுவனம்தான் கொண்டுவந்தது. இப்பொழுது அமேசான் வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறார் சேத்தன்.

girl in 105

Advertisment

இவரது ஃபைவ் பாய்ண்ட் சம் ஒன் (five point someone) நாவல் 'த்ரீ இடியட்ஸ்' படமாகி பல மொழிகளிலும் பெருவெற்றிபெற்றது. '3 மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப்', '2 ஸ்டேட்ஸ்', 'ஹாஃப் கேர்ள் ஃப்ரெண்ட்' என இவரது நாவல் வெற்றி வரிசையில் அடுத்ததாக வர இருக்கிறது 'த கேர்ள் இன் ரூம் 105' நாவல். காதலுக்குப் பெயர் போன இவரது இந்த நாவலின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரைலர் 'அன்லவ் ஸ்டோரி' (unlove story) என்ற குறிப்புடன் வந்திருக்கின்றன. "நான் போதுமான அளவு காதல் கதைகள் எழுதிவிட்டதாக உணர்கிறேன், அதனால் இது அன்லவ் ஸ்டோரியாக வரும்" என்கிறார் சேத்தன். நாயகனின் தந்தை ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர், நாயகி காஷ்மீர் முஸ்லீம் என காஷ்மீர் பின்புலத்தில் நடக்கும் கதையாம். திரைப்படங்கள் அளவுக்கு வரவேற்பு கிடைத்தது சரி, திரைப்படங்கள் அளவுக்கு எதிர்ப்பை பெறாமல் இருக்கிறதா பார்ப்போம்.