Skip to main content

'சென்னைதான் முதலிடம்; வாகன ஓட்டிகள் கவனத்திற்கு' - மத்திய அரசின் புள்ளிவிவர தகவல்

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

 'Chennai is number one; Motorists are for you' - Central Govt. Statistics

 

இந்தியாவிலேயே சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை சென்னை மாநகரம் அதிக அளவில் குறைத்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

 

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசின் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகள் மற்றும் அதற்காக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற சாலை விபத்துகள் தொடர்பான விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

இந்த அறிக்கையின்படி, நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் 67 சதவிகித சாலை விபத்துக்கள் நேரான சாலைகளிலேயே நிகழ்ந்துள்ளன. மொத்தமாக 2022-ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,68,491 பேர் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. விபத்துகளின் தீவிர தன்மை தேசிய சராசரியை விட தமிழகத்தில் குறைவாக உள்ளது.

 

நாட்டிலேயே சாலை விபத்துக்களால் அதிக அளவில் மரணங்கள் ஏற்படும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளின் நிகழும் சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் உத்தரப் பிரதேசத்தில் அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏற்பட்ட சாலை விபத்துகளின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-ல் 3.84 லட்சம் சாலை விபத்துக்கள் நடந்த நிலையில், 20220ல் 4.44 லட்சம் சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் 72.4 சதவிகித விபத்துகளால் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் 75.2 சதவிகித உயிரிழப்புகள் அதிவேகத்தின் காரணமாகவே நடந்துள்ளன. சாலை வளைவுகள், பாலங்கள், மேடு பள்ளங்களை விட நேரான சாலைகளில் தான் அதிக விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.