Skip to main content

“நாட்டில் தங்கம் கடத்தும் மிகப்பெரிய மையமாக சென்னை விமானநிலையம் உள்ளது” - நிர்மலா சீதாராமன்

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

 "Chennai Airport is the largest gold smuggling center in the country" - Nirmala Sitharaman

 

டெல்லியில் நடந்த நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தில் ஜான் பிரிட்டாஸ் எம்.பி. கடத்தல் தங்கம் குறித்து கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார். அதில் அவர், ”நாட்டில் 2021-22 நிதியாண்டில் அதிகபட்சமாக சென்னை விமான நிலையத்தில் 130 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கொல்கத்தாவில் 128 கிலோவும், திருச்சி விமான நிலையத்தில் 78 கிலோவும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.  

 

கரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2020-2021 நிதி ஆண்டில் தங்கம் கடத்தல் வெகுவாக குறைந்துள்ளது. 2019-20-ம் நிதி ஆண்டில் டெல்லி, மும்பையில் அதிக அளவு கடத்தல் தங்கம் சிக்கியது. டெல்லியில் 484 கிலோவும், மும்பையில் 403 கிலோவும் தங்கம் பிடிபட்டது. கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018-19-ம் நிதியாண்டில் மும்பை விமான நிலையத்தில் 763 கிலோ தங்கம் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது. 

 

வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தில் 2019-20-ம் ஆண்டு அறிக்கையின்படி நாடு முழுவதும் சுமார் 185 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது விமான நிலையம், துறைமுகம் மற்றும் தரை வழி, கடல்வழி கடத்தலில் அடங்கும். நாட்டில் தங்கம் கடத்தும் மிகப்பெரிய மையமாக சென்னை விமானநிலையம் உருவாகி உள்ளது. இதையடுத்து கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள விமான நிலைய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்” இவ்வாறு அவர் அந்தப் பதிலில் தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

விமான கட்டணம் கிடுகிடு உயர்வு; பயணிகள் கடும் அதிர்ச்சி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Air fares hike Passengers shocked

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் வார விடுமுறை காரணமாகப் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாகப் பேருந்துகள், ரயில்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் சேலம் செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமான கட்டணத்தை விட 3 முதல் 5 மடங்கு வரை விமான டிக்கெட் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. இதனால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த வகையில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 957 ரூபாயாக இருந்த விமான கட்டணம் தற்போது 12 ஆயிரத்து 716 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 674 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 555 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக 11 ஆயிரத்து 531 ரூபாயாக உள்ளது. மேலும் சென்னையிலிருந்து சேலம் செல்ல வழக்கமாக 2 ஆயிரத்து 433 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 5 ஆயிரத்து 572 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 342 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 616 ரூபாயாக உயர்ந்துள்ளது.