htrs

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதிகளை ஆதரித்து பேசிய வழக்கில் கண்ணையா குமார் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தில் 1200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டது. பாராளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட தினத்தை துக்கத்தினமாக கடந்த 2016-ம் ஆண்டு டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கடைப்பிடித்தனர். அந்த நிகழ்வின் போது அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.இதன் காரணமாக பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த கைதை கண்டித்து டெல்லி மற்றும் மேலும் சில பகுதிகளிலும் மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் வன்முறையாக வெடித்தது. பிறகு இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்ததால் அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.

Advertisment

இந்நிலையில், கண்ணையா குமார் உள்ளிட்டோருக்கு எதிராக இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து கண்ணையா குமார் கூறுகையில், 'மூன்றாண்டுகள் கழித்து தற்போது எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததற்காக காவல்துறைக்கும், பிரதமர் மோடிக்கும் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் இருந்தே இதில் ஏதோ அரசியல் நோக்கம் இருப்பது தெளிவாக புரிகிறது. இருப்பினும் இந்திய நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது' என கண்ணையா குமார் தெரிவித்துள்ளார்.