Chandrashekar Rao request all to go back to their houses

தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பி.ஆர்.எஸ் கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ், கடந்த 8 ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் தனது வீட்டின் குளியலறைக்குச் சென்றபோது வழுக்கி விழுந்தார். பின்பு வலியால் துடித்த அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.பின்னர் அவருக்கு இடது கால் எலும்பு முறிவுஏற்பட்டதை அடுத்து சந்திரசேகர்ராவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.

Advertisment

இந்த நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அதேபோன்று, சந்திரசேகர்ராவின் உடல் நலம் குறித்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேரில் சென்று விசாரித்தார். இந்நிலையில், மருத்துவ கண்காணிப்பில் இருக்கின்ற சந்திரசேகர் ராவ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “இன்று என்னை பார்க்க மருத்துவமனைக்கு வந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

துரதிர்ஷ்டவசமான விபத்திற்குப் பிறகு நான் மருத்துவமனையில் இருப்பதால் நோய்த்தொற்று ஏற்பட்டு உடல்நிலை மோசமடைய வாய்ப்பு இருப்பதாக எனது மருத்துவக் குழு அறிவுறுத்துகிறது. அனைவரும் தங்கள் வீடுகளுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதோடுமட்டுமல்லாமல், என்னை பார்க்க மருத்துவமனைக்கு வந்துசிரமத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். போக்குவரத்து நெரிசலும் அதிகம் இருக்கிறது. நான் குணமடைந்த பிறகு, நாம் அனைவரும் விரைவில் சந்திப்போம்” என்று கூறினார்.

ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்த கடந்த 10 ஆண்டுகளாக சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது. இதனைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியைத்தோற்கடித்து முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment